கோவை: ஒரு பொருளை உற்பத்தி செய்து விற்க தேவையான முக்கிய 3 காரணிகள் குறித்து ஜப்பான் கியோட்டோ பல்கலைக் கழக பேராசிரியர் மசாமி ஷிமிசூ விளக்கினார்.
கோவை பிஎஸ்ஜி தொழில் நுட்பக் கல்லூரியில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கில் பொருள் உற்பத்தி மேம்பாடு மற்றும் வடிவமைப்பு நடைமுறைகள் என்ற தலைப்பில் பேராசிரியர் மசாமி ஷிமிசூ பேசியதாவது: உலகில் எந்தவொரு நாட்டை சேர்ந்த நிறுவனமும் தனது பொருட்களின் தயாரிப்பில் விலை,வாடிக்கையாளர் விருப்பம் உள்ளிட்ட பல்வேறு தர வரிசையைப் பட்டியலிட்டு சந்தையில் களம் இறங்குகின்றன. அதே வேளையில், குறைந்த விலையில் உருவாக்கப்பட்ட நானோ கார், இந்திய மக்களிடம் வரவேற்பைப் பெறவில்லை.
அந்தக் கார் மலிவு விலை என்ற எண்ணம் தான் இதற்கு காரணம். எனவே, ஒவ்வொரு பொருளுக்கும் மதிப்பு என்பது முக்கியமாகும். ஜப்பானில் ரோபோடிக்ஸ் பயன்பாடு அதிகமாக உள்ளது. அங்கே வீடுகளை சுத்தம் செய்வது முதல் பெரிய தொழில் நிறுவனங்கள் வரை ரோபோடிக்ஸ் பயன்பாடு அதிகமாக உள்ளது. இந்த ரோபோடிக்ஸ் இயந்திரங்கள் சோர்வு இல்லாமல், விரைவாகவும், சீராகவும், எந்தவொரு சிக்கலான சூழலிலும் இயங்குகின்றன. எனவே, ஒரு பொருளை உற்பத்தி செய்து விற்பனை செய்ய வேண்டுமெனில் மதிப்பு முன்மொழிவு, தளம், தனித்துவமான வடிவம் ஆகிய மூன்று காரணிகளை முக்கியமாகப் பின்பற்ற வேண்டும், என்றார்.