விழுப்புரம்: விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்ட விழுப்புரம் மாவட்டத்தில், மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த ஏராளமான பெண்கள் பல்வேறு கைவினைத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாவட்டம் முழுவதும் மகளிர் சுயஉதவிக் குழுக்களால் ஆங்காங்கே களிமண், மரம் போன்ற வைகள் கொண்டு சிற்பங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் செய்யப்பட்டு, அவைகளை மொத்த வியாபாரிகள் வாங்கி விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். குறிப்பாக, காகித கூழால் உருவாக்கப்படும் விநாயகர் சிலைகளை செய்வதில் இங்கு அதிகமானோர் ஈடுபடுகின்றனர். இருந்த போதிலும் போதிய சந்தை இல்லாததால், தயாரிப்பாளர்களால் மிக குறைந்த அளவே வருவாய் பெறமுடிகிறது.
இந்நிலையில் நேற்று, ‘உங்களைத்தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் விக்கிர வாண்டி வட்டத்திற்குட்பட்ட தென்னமாதேவி ஊராட்சிக்குட்பட்ட நத்தமேடு பகுதியில் இயங்கிவரும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக் கத்தின் கீழ் இயங்கிவரும் மகளிர் சுய உதவிக்குழுவினரின் மகளிர், சுடுமண் சிற்பங்கள் செய்வதை ஆட்சியர் பழனி ஆய்வு செய்தார். தொடர்ந்து, கலைமகள் சுடுமண் சிற்பக் குழு மையத்துக்கு கட்டிடம் கட்டிக் கொடுக்க இடம் தேர்வு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இது தொடர்பாக ஆட்சியர் பழனி கூறுகையில், “இங்கு களிமண் கொண்டு சிற்பங்கள், வீட்டு உபயோகப்பொருட்கள் செய்து வருகின்றனர். இவர்களுக்கு அரசு புறம்போக்கு நிலத்தை அளித்து, அதில் மண் எடுத்து கொள்ளவும், கிடங்கு அமைத்து கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இவர்கள் தயாரிக்கும் கைவினைப் பொருட்களை சந்தைப் படுத்த திட்டமிட்டுள்ளோம். இதற்காக அமேசான், பிலிப் கார்ட் நிறுவனத்துக்கும், தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்துக்கும் உள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் இப்பொருட்கள் சந்தை படுத்தப்பட உள்ளது” என்று தெரிவித்தார். அப்போது கூடுதல் ஆட்சியர் ஸ்ருதஞ்ஜெய் நாராயணன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஜெய சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.