சென்னை: தெற்கு ரயில்வேயில் பயணிகள் வசதிக்காக, கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் நடப்பாண்டில் ஜனவரி வரை 10 மாதங்களில், 1,807 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. இதன்மூலமாக, ரயில்வே நிர்வாகத்துக்கு ரூ.149.80 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
தெற்கு ரயில்வேயில் பல்வேறு வழித்தடங்களில் விரைவு ரயில்கள், அதிவிரைவு ரயில்கள், வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் நாள்தோறும் கூட்டம் நிரம்பிவழிகிறது. அதிலும், பண்டிகை காலத்தில் ரயில்களின் முன்பதிவு, முன்பதிவில்லாத பெட்டிகளில் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்படும். அந்த நேரத்தில் பயணிகள் நெருக்கடியை குறைக்கும் வகையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். சென்னை எழும்பூர், தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலி, நாகர்கோவிலுக்கும், சென்னை சென்ட்ரலில் இருந்து கோயம்புத்தூருக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். இதுதவிர, பல்வேறு வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். இந்த சிறப்பு ரயில்கள் பயணிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
இதன்பிறகு, பண்டிகை காலம்இல்லாத மற்ற நேரங்களிலும் பயணிகளின் தேவைக்கு ஏற்ப சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதன்காரணமாக, சிறப்பு ரயில்களை இயக்குவது அதிகரித்து வருகிறது. அந்தவகையில், தெற்கு ரயில்வேயில் 2023-24-ம் நிதியாண்டில் ஏப்ரல் முதல் நடப்பாண்டில் ஜனவரி வரை 1,807 சிறப்பு ரயில்கள்இயக்கப்பட்டுள்ளன. இதன்மூலமாக, ரயில்வேக்கு 149.80 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
2022-23-ம் நிதியாண்டில் இதே காலக்கட்டத்தில் (ஏப்ரல் முதல் ஜனவரி வரை) 1,297 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இதன்மூலமாக, ரூ.91.71 கோடி வருவாய் கிடைத்தது. தற்போது, சிறப்பு ரயில்கள் மட்டுமின்றி வருவாயும் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: குறிப்பிட்ட வழித்தடங்களில் இயக்கப்படும் வழக்கமான ரயில்களில் டிக்கெட் முன்பதிவு முடிந்து, காத்திருப்போர் பட்டியல் நீள்கிறது. இதை அடையாளம் கண்டு, அந்த குறிப்பிட்ட வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இது பயணிகளுக்கு பேருதவியாக இருக்கிறது. சிறப்பு ரயில்களுக்கு தேவை அதிகமாக இருப்பதால், தொடர்ந்து இயக்கப்படுகிறது.
குறிப்பாக, சென்னை - நாகர்கோவில் வழித்தடத்தில் சிறப்பு ரயில்களுக்கு பயணிகளிடம் அதிகதேவை இருக்கிறது. இதனால், இந்த வழித்தடத்தில் கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. கடந்த 10 மாதத்தில் மட்டும் 1,807 சிறப்பு ரயில்களை இயக்கி உள்ளோம். கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் நடப்பாண்டில் ஜனவரி ஆகிய 3 மாதங்களில் தலா 200-க்கும் மேற்பட்ட ரயில்களை இயக்கி உள்ளோம். பயணிகள் தேவைக்கு ஏற்ப சிறப்பு ரயில்கள் இயக்குவது தொடரும் என்றனர்.