என்.பழனிச்சாமி, எம்.பி.ராமன் 
வணிகம்

தமிழக வேளாண் பட்ஜெட் பெருத்த ஏமாற்றம்: விவசாயிகள் கருத்து

செய்திப்பிரிவு

மதுரை: சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் நேற்று தாக்கல் செய்த தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டில், விவசாய மேம்பாட்டுக்கான திட்டங்கள் ஒன்று கூட அறிவிக்கப்படாதது பெருத்த ஏமாற்றம் அளிப்பதாக, மதுரை மாவட்ட விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பெரியாறு வைகை திருமங்கலம் பாசனக் கால்வாய் திட்ட தலைவர் எம்.பி.ராமன் கூறியதாவது: மத்திய அரசு வேளாண் திட்டங்களுக்கு வழங்கும் நிதியை, மாநில அரசு வழங்குவதுபோல் திட்டங்களை அறிவித்துள்ளனர். நூறு நாள் வேலை திட்டத்தில் வழங்கப்படும் நிதியின் மூலம், கிராமப்புற கலைஞர் மேம்பாட்டுத் திட்டத்தில் ஏரிகள், பண்ணைக் குட்டைகள் அமைக்கவும், தூர்வாரப்படும் எனவும் அறிவித்துள்ளனர். ஏற்கெனவே, தேர்தல் வாக்குறுதிகளையே திமுக அரசு இன்னும் நிறைவேற்றவில்லை.

வேளாண் பட்ஜெட் தொடர்பாக அமைச்சர் விவசாயிகளின் கருத்துகளை கேட்டறிந்தபோது, மதுரை பகுதியில் விவசாய மேம்பாட்டுக்கு 15 வகையான திட்டங்கள் குறித்து ஆலோசனை கள் வழங்கினோம். அதில் ஒன்றுகூட அறிவிப்பில் இல்லை. மதுரை மல்லிகை விவசாயிகளின் நலன் கருதி, குளிர்பதனக் கிடங்குகள், மல்லிகைப் பூச்செண்டு தொழிற்சாலை அமைப்பது குறித்து அறிவிப்பில்லை.

வைகை அணையில் 20 அடிக்கு மேல் வண்டல் மண் படிந்திருப்பதை தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் நிறைவேற்றப் படவில்லை. இது போன்று பல திட்டங்கள் அறிவிக்கப்படும் என எதிர்பார்த்திருந்தோம். ஆனால், விவசாயிகள் பலனடையும் வகையில் எந்தத் திட்டமும் அறிவிக்கப்படாததால், தென்மாவட்ட விவசாயிகளுக்கு பெருத்த ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும், நிலங்களை காக்க போராடிய விவசாயிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்த திமுக அரசின் பட்ஜெட், விவசாயிகளின் உரிமைகளைப் பறிக்கும் பட்ஜெட் ஆக உள்ளது.

தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநிலத் துணைத் தலைவர் என்.பழனிச்சாமி கூறியதாவது: கரும்புக்கு மத்திய, மாநில அரசுகளின் பரிந்துரை விலை கிடைத்து வந்தது. இதை கடந்த அதிமுக அரசு ரத்து செய்தது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாநில அரசின் பரிந்துரை விலை வழங்குவோம் என திமுக தேர்தல் வாக்குறுதி அளித்தது. ஆனால், ஆட்சிக்கு வந்தவுடன் பரிந்துரை விலைக்கு பதிலாக ஊக்கத் தொகையாக டன்னுக்கு ரூ.195 மட்டுமே வழங்கினர்.

தற்போது, அதில் ரூ.20 கூடுதலாக சேர்த்து ரூ.215 வழங்கவுள்ளனா். ஆனால், மற்ற மாநிலங்களில் மத்திய, மாநில அரசுகள் சேர்ந்து டன்னுக்கு ரூ.3,800 வழங்குகின்றனர். தமிழக அரசு ஊக்கத்தொகையையும் சேர்த்து ரூ.3,050 மட்டுமே வழங்குகிறது. இது கரும்பு விவசாயிகளுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது. மேலும், அலங்காநல்லூர், மயிலாடுதுறையில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் திறப்பது குறித்து அறிவிக்காதது பெருத்த ஏமாற்றம். இதற்கு, சட்டப்பேரவை பதிலுரையிலாவது தமிழக முதல்வர் நல்ல முடிவுகளை அறிவிப்பார் என எதிர்பார்க்கிறோம். என்றார்.

SCROLL FOR NEXT