பெர்ஜர் பெயின்ட்ஸ் லாபம் 17% உயர்வு
பெர்ஜர் பெயின்ட்ஸ் நிறுவனத்தின் ஜூன் காலாண்டு நிகர லாபம் 17 சதவீதம் உயர்ந்து 57 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டின் நிகர லாபம் 49.10 கோடி ரூபாயாக இருந்தது.
நிகர விற்பனை 16.78 சதவீதம் உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் ரூ.904 கோடியாக இருந்த நிகர விற்பனை இப்போது ரூ.1,056 கோடியாக உயர்ந்திருக்கிறது. நிகர லாபம், விற்பனை போல செலவுகள் 16% உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் ரூ.833 கோடியாக இருந்த செலவுகள் இப்போது ரூ.967 கோடியாக உயர்ந்திருக்கின்றன.
வர்த்தகத்தின் முடிவில் 1.27 சதவீதம் சரிந்து 296.35 ரூபாயில் பங்கின் வர்த்தகம் முடிந்தது.
யூபிஐ நிகர லாபம் 18.5% உயர்வு
யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் (யூபிஐ) நிகர லாபம் 18.5 சதவீதம் உயர்ந்து 664 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் வங்கியின் நிகர லாபம் 560 கோடி ரூபாயாக இருந்தது.
வங்கியின் மொத்த வருமானம் ரூ.7,613 கோடியிலிருந்து ரூ.8,547 கோடியாக அதிகரித்திருக்கிறது. நிகர வட்டி வருமானம் 10.8% அதிகரித்திருக்கிறது. கடந்த வருடம் ரூ.1,910 கோடியாக இருந்த நிகரவட்டி வருமானம் இப்போது 2,117 கோடியாக இருக்கிறது.
மொத்த வாராக்கடன் 3.50 சதவீதத்திலிருந்து 4.27 சதவீதமாகவும், நிகர வாராக்கடன் 1.96 சதவீதத்திலிருந்து 2.48 சதவீதமாகவும் அதிகரித்திருக்கிறது.
கரூர் வைஸ்யா வங்கி லாபம் ரூ.122 கோடி
கரூர் வைஸ்யா வங்கியின் ஜூன் காலாண்டு நிகர லாபம் ரூ.122 கோடியாக இருக்கிறது. கடந்த வருடத்தின் இதே காலாண்டுடன் ஒப்பிடும் போது சிறிதளவு உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் 120 கோடியாக இந்த வங்கியின் லாபம் இருந்தது. வாராக்கடன்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகை பாதியாக குறைந்திருக்கிறது. கடந்த வருடம் ரூ.163 கோடியாக இருந்த இந்த தொகை இப்போது ரூ.86 கோடியாக இருக்கிறது. வங்கியின் மொத்த வாராக்கடன் குறைந்தும் நிகர வாராக்கடன் சிறிதளவு அதிகரித்தும் இருக்கிறது. மொத்த வாராக்கடன் 1.51 சதவீதத்திலிருந்து 1.30 சதவீதமாக குறைந்தும், நிகர வாராக்கடன் 0.50 சதவீதத்திலிருந்து 0.53 சதவீதமாக அதிகரித்தும் இருக்கிறது.
டைட்டன் நிகர லாபம் 2.85% சரிவு
டைட்டன் நிறுவனத்தின் ஜூன் காலாண்டு நிகர லாபம் 2.85% சரிந்து ரூ.177 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலத்தில் ரூ.182 கோடியாக நிகர லாபம் இருந்தது.
நிகர விற்பனையும் 7.58% சரிந்தது. கடந்த வருடம் ரூ.3,087 கோடியாக இருந்த விற்பனை இப்போது ரூ.2,853 கோடியாக சரிந்திருக்கிறது. கடந்த வருடம் இதே காலத்தில் அபரிமிதமான வளர்ச்சி இருந்ததால், நடப்பு நிதி ஆண்டில் அதை தாண்டும் அளவுக்கு வருமானம் ஈட்டுவது கடினமாக இருக்கிறது என்று நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பாஸ்கர் பட் தெரிவித்தார். நிறுவனத்தின் ஜூவல்லரி வியாபாரம் 10.1% சரிந்தும், வாட்ச் வியாபாரம் 10.4% உயர்ந்தும் இருக்கிறது.