ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் மற்றும் சுற்றுவட்டாப் பகுதிகளில் பருத்தி அதிக விளைச்சல் இருந்தும், எதிர்பார்த்த விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
ஒட்டன்சத்திரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பருத்தியை அதிக பரப்பளவில் விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு போதுமான மழை பெய்ததால் பருத்தி விளைச்சல் அமோகமாக உள்ளது. தற்போது அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அதே நேரம், இதேபோல் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக பருத்தி அறுவடை நடப்பதால் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக விலை சரிவடைந்துள்ளது. தற்போது ஒரு குவிண்டால் ( 100 கிலோ ) ரூ.6,500 முதல் ரூ.6,700 வரை விற்பனையாகிறது. பருத்தி நன்கு விளைந்துள்ளதால் அதிக வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இது குறித்து கொசவபட்டியைச் சேர்ந்த விவசாயி துரைசாமி கூறியதாவது: கடந்த ஆண்டு ஒரு குவிண்டால் ரூ.6,000 முதல் ரூ.6,500 வரை விற்பனை யானது. இந்த ஆண்டாவது விலை அதிகரிக் கும் என்று எதிர்பார்த்தோம். அதிக விளைச்சல் கிடைத்துள்ள நிலையில், எதிர்பார்த்த விலை கிடைக்க வில்லை. கடந்த ஆண்டு விற்ற விலைக்கே தற்போதும் வியாபாரிகள் கொள்முதல் செய்து வருகின்றனர். களை எடுத்தல், மருந்து தெளித்தல், உரமிடுதலுக்கான செலவு, தொழிலாளர்களுக்கான கூலியை கணக்கிட்டால் இந்த விலை கட்டுப் படியாகாது. ஒரு குவிண்டால் ரூ.9,000 முதல் ரூ.10,000 வரை விற்றால்தான் விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும் என்று கூறினார்.