மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தில் நேற்று (வியாழன்) தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் வருமான வரியின் கீழ், மீண்டும் நிரந்தர கழிவு முறை அமலுக்கு வருவதாக அறிவித்துள்ளார். இதன் மூலம் மாதச்சம்பளம் பெறுபவர்களுக்கு எவ்வுளவு வரிச்சலுகை கிடைக்கும் என்பதே கேள்வியாக உள்ளது.
இதுபற்றி ஆடிட்டர் எனப்படும் பட்டய கணக்காளர் முரளி அளித்த தகவல் வருமாறு:
மாத சம்பளதாரர்கள் தங்கள் வருமான வரியை கணக்கீடு செய்யும்போது, அவர்களின் போக்குவரத்து மற்றும் மருத்துவ செலவுகளுக்காக செய்யும் செலவுத்தொகையை நிரந்தரமாக கணக்கிட்டு, கழித்துக் கொள்வதே நிலையான கழிவு என்பதாகும்.
80சி, 80டி என பல பிரிவுகளின் கீழ் விலக்கு வழங்கப்படும் நிலையில் நிரந்தர கழிவு என்பது தேவையில்லை என்ற முடிவெடுத்து அது நீக்கப்பட்டது.
இந்நிலையில் நிரந்தர கழிவு என்பது மீண்டும் கொண்டுவரப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மாத சம்பளதாரர்கள், 40,000 ரூபாயை நிரந்தர கழிவாக பெற்றுக் கொள்ள முடியும்.
அதேசமயம் தற்போது வழங்கப்பட்டு வரும் போக்குவரத்து மற்றும் மருத்துவ செலவுக்காக கணக்கீட்டின் அடிப்படையில் பெறும் விலக்கு இனிமேல் இருக்காது.
அதுபோலவே வருமான வரியில் தற்போது கல்விக்காக வசூலிக்கப்படும் கூடுதல் வரியான 3 சதவீதம் என்பது மாற்றப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக கல்வி மற்றும் மருத்துவ காப்பீட்டு திட்டங்களுக்காக 4 சதவீத கூடுதல் வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் செலுத்த வேண்டிய தொகை கூடுதலாகும்.
மாதந்தோறும் 50 ஆயிரம் ரூபாய் மாதச்சம்பளம் பெறுபவர் என்றால் அவருக்கு கீழ்கண்டவாறு வரி விகிதம் அமையும்
தற்போது:
மொத்த சம்பளம் - 6,00,000
வரி விலக்கு - 2.50,000
---------------------------------------------------
மீதமுள்ள தொகை- 3,50,000
போக்குவரத்து
மற்றும் மருத்துவபடி- 34,200
-----------------------------------------------------
3,15,800
இந்த தொகைக்கு மட்டும் வருமான வரி செலுத்த வேண்டும்.
இனிமேல்
மொத்த சம்பளம் - 6,00,000
வரி விலக்கு - 2.50,000
---------------------------------------------------
மீதமுள்ள தொகை- 3,50,000
போக்குவரத்து
மற்றும் மருத்துவபடி- 40,000
-----------------------------------------------------
310,000
---------------------------------------------
எனவே நிரந்தர கழிவின் மூலம் 5800 ரூபாய் மட்டுமே கூடுதலாக கழிவு பெற முடியும். அதேசமயம் ஒரு சதவீதம் கூடுதல் வரி உயர்த்தப்பட்டுள்ளதால், அதற்கு வரி அளவு அதிகரிக்கும் என்பதால் தற்போதைய வருமான வரி விதிப்பிற்கும், நிரந்தர கழிவு தரப்பட்ட பிறகும் பெரிய அளவில் மாற்றம் இருக்காது.
மாதச் சமபளம் வாங்கும் நபருக்குகூட, செலுத்த வேண்டிய வரியில் அதிகபட்சம் 300 ரூபாய் அளவில் மட்டுமே லாபம் இருக்கும். மேற்கூறிய கணக்கீட்டில், 80சி, 80டி உட்பட பல்வேறு வரிச்சலுகை கணக்கிடவில்லை. இன்சூரன்ஸ், குழந்தைகளின் கல்வி என்ற பிரிவுகளின் கீழ் பெறும் வரி விலக்கு தொகை, இதில் சேர்க்கப்படவில்லை.
இவ்வாறு முரளி கூறினார்.