கோப்புப் படம் 
வணிகம்

2023-24 நிதியாண்டுக்கான EPF வட்டி 8.25% ஆக உயர்கிறது; 3 ஆண்டுகளில் அதிகபட்சம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: 2023-24 நிதி ஆண்டில், பணியாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டியை 8.25% ஆக உயர்த்த பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மத்திய அறங்காவலர் குழு பரிந்துரைத்துள்ளது.

பணியாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் ஒவ்வொரு நிதி ஆண்டின் இறுதி பகுதியில் முடிவு செய்யப்படுகிறது. பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் உயர் அமைப்பான மத்திய அறங்காவலர் குழு இதற்கான பரிந்துரையை மத்திய நிதி அமைச்சகத்துக்கு வழங்குகிறது. அந்த அடிப்படையில், 2023-24 நிதி ஆண்டுக்கான பணியாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டியை 8.25% ஆக உயர்த்த மத்திய அறங்காவலர் குழு பரிந்துரைத்துள்ளது. இன்று நடைபெற்ற மத்திய அறங்காவலர் குழு கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

2020-21 நிதி ஆண்டில், பணியாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி 8.50% ஆக இருந்தது. பின்னர், 2021-22ல் அதிரடியாக 8.10% ஆக குறைக்கப்பட்டது. 1977-78 நிதி ஆண்டுக்குப் பிந்தைய காலத்தின் மிகக் குறைந்த வட்டி விகிதமாக அது இருந்தது. அதன் பிறகு, 2022-23ல் பணியாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி 8.15% ஆக உயர்த்தப்பட்டது. தற்போது இது 8.25% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த உயர்வு குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பூபேந்திர யாதவ், இந்தியாவின் பணியாளர் சக்தியின் சமூக பாதுகாப்பை வலுப்படுத்துவது என்ற பிரதமர் நரேந்திர மோடியின் வாக்குறுதியை நிறைவேற்றும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனக் கூறினார். மத்திய அறங்காவலர் குழுவின் இந்தப் பரிந்துரையை ஏற்று மத்திய நிதி அமைச்சகம் பணியாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி அறிவிப்பு வெளியிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT