ஹரித்வார்: கிராமப்புறங்களிலும் மெட்பிளஸ் மருந்தகங்கள் விரிவுபடுத்தப்படும் என்று மெட்பிளஸ் நிறுவனர் கங்காடி மதுகர் ரெட்டி தெரிவித்தார். தமிழகம் வணிகத்துக்கு உகந்த மாநிலமாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
இந்தியாவில் உள்ள முன்னணி மருந்து விற்பனை நிறுவனங்களில் ஒன்றான மெட்பிளஸ் நிறுவனம், மேற்கத்திய நாடுகளில் பிரபலமான ‘ஸ்டோர் ஜெனரிக்’ எனும் முறையை இந்தியாவில் புதிதாக அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம், தனதுசொந்த தயாரிப்பு மருந்துகளை தொழிற்சாலையில் இருந்து நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு குறைந்த செலவில் வழங்க இருக்கிறது.
முதல்கட்டமாக, நாட்டில் உள்ளபிரபல மருந்து உற்பத்தி நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து 700-க்கும்மேற்பட்ட மருந்துகளை கொள்முதல் செய்ய ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக 70சதவீதம், அதாவது 450 மருந்துகள், உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள அகும்ஸ் மருந்து உற்பத்தி நிறுவனத்தில் தயாரிக்கப்படுகின்றன.
இந்நிலையில், ஹரித்வாரில் உள்ள அகும்ஸ் மருந்து உற்பத்தி தொழிற்சாலையில் பாதுகாப்பு வழிமுறைகளுடன் மாத்திரைகள் தயாரிக்கப்படுவது குறித்து நேரடியாகஎடுத்துரைக்கப்பட்டது. அகும்ஸ்நிறுவனம் உடனான ஒருங்கிணைப்பு, மருந்துகள் தயாரிக்கும் முறை குறித்து மெட்பிளஸ் நிறுவனம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அப்போது, செய்தியாளர்களிடம் மெட்பிளஸ் நிறுவனர் கங்காடி மதுகர் ரெட்டி கூறியதாவது:
நாடு முழுவதும் 4,200 மெட்பிளஸ் மருந்தகங்கள் செயல்படுகின்றன. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மருந்துகளை உற்பத்தி செய்ய வேண்டும். இடைத் தரகர்கள் இல்லாமல் தொழிற்சாலைகளில் இருந்து நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு குறைந்த செலவில் அந்த மருந்துகளை வழங்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.
இதன் காரணமாக, மெட்பிளஸ் தயாரிப்பு மருந்துகளுக்கு 50 முதல்80 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. எங்களது இந்த செயல்முறை, மருந்து தொழில் துறையில்மாபெரும் மாற்றத்தை கொண்டுவரும் என்று எதிர்பார்க்கிறோம். முதல்கட்டமாக, இந்த ஆண்டில் 700-க்கும் மேற்பட்ட எங்களதுசொந்த தயாரிப்பு மருந்துகளை அறிமுகம் செய்ய உள்ளோம்.இவை சராசரி வாடிக்கையாளர்களின் 70 சதவீத மருந்து தேவைகளை பூர்த்தி செய்துவிடும்.
மெட்பிளஸ் நிறுவனத்தின் வணிகத்தில் தமிழகத்துக்கு முக்கியபங்கு உள்ளது. தமிழகம் வணிகத்துக்கு உகந்த மாநிலமாக இருப்பதால், அங்கு தொழில் செய்வது எளிதாக இருக்கிறது. தமிழகம் முழுவதும் 800 மெட்பிளஸ் மருந்தகங்கள் இயங்கி வருகின்றன. சென்னையில் மட்டுமே 450 கடைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் மாவட்டம், கிராமம்,தாலுகா வாரியாகவும் மெட்பிளஸ் மருந்தகங்களை விரிவுபடுத்த கவனம் செலுத்தி வருகிறோம். குறைந்தபட்சம் 30 ஆயிரம் மக்களை கொண்டஅனைத்து பகுதிகளிலும் மருந்தகம் கொண்டு வருவதே எங்கள் நோக்கம். தொடர்ந்து எங்களது மருந்துகளை தமிழகத்தில் இருந்து தயாரிக்கவும் வாய்ப்புகளை எதிர்நோக்கி உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.