உடுமலை: உடுமலை சுற்றுவட்டாரத்தில் சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் தர்பூசணி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஏக்கருக்கு ரூ.8,000 வரை மானியம் பெறலாம் எனவும், விருப்பமுள்ள விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் எனவும் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் தெரிவித்தார்.
ஆண்டுதோறும் கோடை காலத்தில், உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தர்பூசணி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபடுவது வழக்கம். தாந்தோணி, துங்காவி, மெட்ராத்தி, சங்கராம நல்லூர் உட்பட 50-க்கும் மேற்பட்ட ஊர்களில் சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் தர்பூசணி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் சுரேஷ்குமார் கூறியதாவது: கோடை காலத்தில் தர்பூசணி சாப்பிட்டால், உடலுக்கு குளிர்ச்சியும், நீர்ச்சத்தும் கிடைக்கும். தர்பூசணியால் விவசாயிகளுக்கு நிறைவான வருமானமும் கிடைக்கும். அதிக உரம், அதிக மருந்து, அதிக நீரை பயன்படுத்தினால் தர்பூசணி விளைச்சலில் பாதிப்பு ஏற்படும். ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு மற்றும் நுனி கிள்ளுதல் முதலிய உத்திகள் மூலம் மகசூலை அதிகரிக்கலாம்.
அதிக நீர் தேங்காத, வளமான மண் உள்ள இடத்தில் தர்பூசணி நன்கு வளரும். அதிக பனியை தர்பூசணி தாங்காது. மித வெப்பம், அளவான ஈரப்பதம், நல்ல சூரிய ஒளி உள்ள காலத்தில் நல்ல விளைச்சல் கிடைக்கும். பழங்கள் முதிர்ச்சி அடையும்போது அதிக வெப்பநிலை இருப்பின் இனிப்புச் சுவையும் கூடுதலாக வாய்ப்புள்ளது. எனவே ஜனவரி, பிப்ரவரி, ஜூன், ஜூலை மாதங்களில் தர்பூசணியை சாகுபடி செய்ய வேண்டும். மண் பரிசோதனை செய்து உரிய உரமிட வேண்டும்.
ஐந்து முதல் ஏழு நாட்களுக்குள் விதைகள் முளைத்து விடும். 15 நாட்கள் வரை உயிர் தண்ணீர் சிறிது சிறிதாக விட வேண்டும். பின்னர் நிலத்தின் தன்மைக்கு ஏற்ப நீர் நிர்வாகம் செய்ய வேண்டும். இயற்கை முறையில் பஞ்சகவ்யா மற்றும் அமுத கரைசலை தயார் செய்து சாகுபடிக்கு பயன்படுத்தினால், பூச்சி நோய் தாக்குதல், களைச்செடிகளை அறவே தவிர்க்க முடியும். அதே போன்று பழங்கள் அறுவடைக்கு தயாராக இருக்கும் தருணத்தில், நீர் பாய்ச்சக் கூடாது.
அவ்வாறு பாய்ச்சினால் விற்பனைக்கு பழங்களை ஏற்றும் போது பழங்களில் வெடிப்பு ஏற்படும். நடவு செய்த நாளிலிருந்து 70 நாட்களில் பழங்கள் அறுவடைக்கு தயாராகிவிடும். குறைந்த நாட்களில்நிறைவான லாபம் தரும் தர்பூசணிசாகுபடிக்கு தோட்டக்கலை இயக்கம் மூலம் ஓர் ஏக்கருக்கு ரூ.8,000 வரை மானியம் வழங்கப்படுகிறது. மடத்துக்குளம் வட்டாரத்தில் 25 ஏக்கருக்கு 50,000 நாற்றுகள் விநியோகிக்க ரூ.2 லட்சம்மானியம் வழங்கப்பட உள்ளது. விருப்பமுள்ள விவசாயிகள், தோட்டக்கலை துறை அலுவலகத்தை நேரில் அணுகி விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.