வணிகம்

ஈரோடு மஞ்சள் சந்தையில் புது மஞ்சள் வரத்தால் ஏறுமுகத்தில் மஞ்சள் விலை: நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி

எஸ்.கோவிந்தராஜ்

ஈரோடு: ஈரோடு மஞ்சள் சந்தைக்கு புதுமஞ்சள் வரத்தாகி உள்ளதால் மஞ்சள் விலை ஏறுமுகத்தில் உள்ளது.

ஈரோடு, பெருந்துறையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், ஈரோடு, கோபியில் உள்ள கூட்டுறவுச் சங்கம் என 4 இடங்களில், திங்கள் முதல் வெள்ளி வரை ஏலம் மூலம் மஞ்சள் விற்பனை நடக்கிறது.

இந்நிலையில், ஈரோடு மஞ்சள் சந்தைக்கு புதுமஞ்சள் வந்துள்ளதால் நேற்று முன் தினம் அதிகபட்சமாக மஞ்சள் குவிண்டால் ரூ.15,219-க்கு விற்பனையானது. தேவைக்கேற்ப மஞ்சள் சாகுபடி நடக்காததால், இந்த ஆண்டு மஞ்சள் விலை மேலும் உயரும் என்று வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மஞ்சள் வணிகரும், ஈரோடுமாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவருமான வி.கே.ராஜமாணிக்கம் கூறியதாவது:

கடந்த காலங்களில் உரிய விலை கிடைக்காததால், இந்த ஆண்டு மஞ்சள் விதைப்பு 30 சதவீதம் குறைந்துள்ளது. மேலும், மழை, தட்பவெப்ப நிலையால் சாகுபடியும் 10 சதவீதம் குறைந்துள்ளது. எனவே, நாடு முழுவதும் இந்த ஆண்டு 50 முதல் 60 சதவீதம் மஞ்சள் மட்டுமே விற்பனைக்கு வரும்.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, தமிழகத்தில் 50 சதவீத மஞ்சள் மட்டுமே வரத்தாகும். மேலும், இந்த ஆண்டு தேவைக்கேற்ப மஞ்சள் வரத்தாகாது என்பதால், நவம்பர், டிசம்பருக்குள் மஞ்சள் விலை மேலும் உயரும் வாய்ப்புள்ளது.

தற்போது, மைசூருவில் இருந்து புது மஞ்சள் வந்துள்ளதால் குவிண்டால் ரூ.15 ஆயிரம் வரை விற்பனையானது. நல்ல விலை கிடைப்பதால், விவசாயிகள் இருப்பில் உள்ள மஞ்சளை விற்று வருகின்றனர். பழைய மஞ்சள் குவிண்டால் ரூ.10 ஆயிரம் வரை விற்பனையாகிறது. மஞ்சள் ஏற்றுமதி ஆர்டரும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. கடந்த ஆண்டு 33 லட்சம் மூட்டை மஞ்சள், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். மஞ்சள் விலை ஏறுமுகத்தில் உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துஉள்ளனர்.

SCROLL FOR NEXT