பிரதிநிதித்துவப் படம் 
வணிகம்

கட்டுமான பொருட்கள் விலை 60% உயர்வுள் ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பு உண்ணாவிரதம் இருக்க முடிவு

செய்திப்பிரிவு

சேலம்: கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் கட்டுமான பொருட்களான ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் உள்ளிட்ட பொருட்களின் விலை 40 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. கட்டுமானப் பொருட்களின் விலையை குறைக்கவில்லை என்றால் விரைவில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும், என அரசு ஒப்பந்ததாரர்கள் சேலம் மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்ததாரர்கள் சங்கத்தின் சார்பில் அனைத்து துறையில் பணியாற்றும் அரசு ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் சேலத்தில் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் சுப்பிரமணி தலைமை வகித்தார். பொதுப் பணித்துறை, ரயில்வே துறை, நெடுஞ்சாலைத் துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளில் கட்டிட ஒப்பந்ததாரர்கள் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில், கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் கட்டுமான பொருட்களான ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் உள்ளிட்ட பொருட்களின் விலை 40 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இதனால், கட்டுமான தொழிலில் ஈடுபட்டவர்கள் பாதிப்படைந்துள்ளனர். கட்டுமான பணிகளிலும் தொய்வு நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசு முத்தரப்பு கூட்டத்தை நடத்தி கட்டுமானப் பொருட்களின் விலை ஏற்றத்தை குறைக்க உரிய தீர்வு காண வேண்டும். இதற்காக ஒழுங்கு முறை ஆணையத்தை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இது குறித்து, கூட்டமைப்பின் சேலம் மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் கூறியது: கிரஷர் உரிமையாளர்கள் தன்னிச்சையாக விலை ஏற்றம் செய்துள்ள நடவடிக்கையால் கட்டுமான தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர். எம்.சாண்ட், பி.சாண்ட், ஜல்லி ஆகிய வற்றின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் விரைவில் சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பு அரசு ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பு சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்த கூட்டத்தில் முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். இதில் மண்டல பொறுப்பாளர் காமராஜ், முன்னாள் தலைவர் கார்மேகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT