வணிகம்

வெளி மாநில வியாபாரிகள் வராததால் ஈரோடு ஜவுளி சந்தையில் மொத்த வியாபாரம் பாதிப்பு

செய்திப்பிரிவு

ஈரோடு: வெளி மாநில வியாபாரிகள் வராததால், ஈரோடு ஜவுளிச்சந்தையில் நேற்று மொத்த வியாபாரம் குறைந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகே செயல்படும் கனி ஜவுளிச் சந்தையில், ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமை தொடங்கி செவ்வாய் கிழமை மாலை வரை மொத்த ஜவுளிச் சந்தை நடந்து வருகிறது. இதேபோல், ஈரோடு அசோகபுரம், சென்ட்ரல் தியேட்டர் பகுதியிலும் மொத்த ஜவுளிச் சந்தை நடந்து வருகிறது. ஈரோட்டில் வாரம் தோறும் நடக்கும் மொத்த ஜவுளி சந்தையில் துணிகளை கொள்முதல் செய்வதற்காக மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் இருந்து நூற்றுக் கணக்கான வெளி மாநில வியாபாரிகள் வருவது வழக்கம்.

அதேபோல், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இந்த இரு நாட்களில் மொத்த ஜவுளி கொள்முதலுக்காக வியாபாரிகள் வருவார்கள். இதனால் இந்த இரு நாட்களிலும் ஜவுளி சந்தை களைகட்டிக் காணப்படும். பொங்கல் பண்டிகை முடிந்த பின் ஜவுளி விற்பனை குறைந்திருந்த நிலையில், நேற்று நடந்த மொத்த ஜவுளிச் சந்தைக்கு வெளி மாநில வியாபாரிகள் வராததால் சந்தை வெறிச்சோடி காணப்பட்டது. ஆந்திரா, கேரளா வியாபாரிகள் வரவில்லை என்று தெரிவித்த வியாபாரிகள், மொத்த ஜவுளி வியாபாரம் 15 சதவீதமும், சில்லறை வியாபாரம் 20 சதவீதமும் மட்டுமே நடந்தது எனத் தெரிவித்தனர். திருமண முகூர்த்தம் இருப்பதால், சில்லறை விற்பனை அடுத்தடுத்த நாட்களில் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஜவுளி வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT