கிருஷ்ணகிரி: மழை மற்றும் பனியின் தாக்கம் குறைந்ததால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொள்ளு மகசூல் 20 சதவீதம் குறைந்துள்ளது என விவசாயிகள் தெரிவித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, தீர்த்தம், ராமன்தொட்டி, கடத்தூர், சூளகிரி, குருபரப்பள்ளி, குந்தாரப்பள்ளி, பர்கூர், போச்சம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கொள்ளு சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏக்கருக்கு 8 கிலோ: 5 மாத பயிரான கொள்ளு பயிரை சாகுபடி செய்ய விவசாயிகள் விளை நிலத்தை புரட்டாசி மாதம் உழவு செய்து விதைக் கின்றனர். ஒரு ஏக்கருக்கு 8 கிலோ வரை கொள்ளு விதைக்கின்றனர். கடந்தாண்டு கொள்ளு விதைப்பு பணி நடைபெற்ற போது மழை குறைந்ததாலும், தொடர்ந்து பனியின் தாக்கம் குறைவாக இருந்ததாலும் தற்போது, மகசூல் 20 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
பனிப்பொழிவை நம்பியே கொள்ளு: இது தொடர்பாக போச்சம்பள்ளி பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது: மானவாரிப் பயிர்களில் அதிக வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய பயிர்களில் கொள்ளும் ஒன்று. பனிப் பொழிவை நம்பியே கொள்ளு விதைக்கப்படுகிறது. மேலும், பராமரிப்பு செலவும் குறைவு. கடந்த ஆண்டு விதைப்பின்போது போதிய மழை இல்லாததாலும், காய்கள் பிடிக்கும் தருணத்தில் பனியின் தாக்கம் குறைந்ததாலும், போச்சம் பள்ளி, மத்தூர், ஊத்தங்கரை வட்டாரங்களில் வழக்கத்தைவிட 20 சதவீதம் மகசூல் குறைந்துள்ளது.
தற்போது, காய்கள் முதிர்ச்சி அடைந்து, அறுவடை பணி தொடங்கி உள்ளது. காலை 10 மணிக்குள் விவசாயிகள் அறுவடையை முடித்து, காய்களைக் காய வைக்கின்றனர். பின்னர், கதிரடித்துப் பருப்புகளைத் தனியாகப் பிரித்து எடுக்கப்படுகிறது. ஏக்கருக்கு குறைந்தது 300 கிலோ முதல் 400 கிலோ வரை கிடைத்துள்ளது.
விலையும் சரிவு: கடந்தாண்டு ஒரு கிலோ கொள்ளு ரூ.76 வரை கொள்முதல் செய்த வியாபாரிகள், தற்போது, கிலோ ரூ.60 முதல் ரூ.65-க்கு கொள் முதல் செய்கின்றனர். மேலும், கொள்ளு செடியில் இருந்து கொள்ளு பயிர்களைப் பிரித்தெடுத்த பின்னர் கிடைக்கும் செடியை ஆடு, மாடுகளுக்குத் தீவனமாகப் பயன்படுத்து கிறோம். கொள்ளு பருப்பானது மருத்துவப் பலன்களைக் கொண்டுள்ளதால், நுகர்வு அதிகரித்து வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.