புதுடெல்லி: நாட்டின் கடன் சுமையைக் குறைக்கவும், பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மக்களவையில் பேசிய அவர், "நாட்டின் கடன் சுமையைக் குறைக்க, வரி வருவாயை அதிகரிப்பது, பொதுச் செலவினத் திறனை அதிகரிப்பது, நிதிப் பற்றாக்குறையைக் குறைப்பது மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிப்பது போன்ற பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது. நிதி அமைப்பை வலுப்படுத்துவதுடன், அரசாங்கம் அதன் பயனுள்ள மூலதனச் செலவினத்தை உயர்ந்தியள்ளது. 2020-21-இல் ரூ. 6.57 டிரில்லியனாக இருந்த மூலதனச் செலவினம், 2023-24 மற்றும் 2024-25-இல் முறையே ரூ.13.71 டிரில்லியனாகவும், ரூ.14.97 டிரில்லியனாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
50 ஆண்டு கால வட்டியில்லா கடன்கள் உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் மாநில அரசுகள் தங்கள் மூலதனச் செலவினங்களை அதிகரிக்க ஊக்குவிக்கப்பட்டுள்ளன. கார்ப்பரேட் வரி விகிதத்தை குறைத்தல், அன்னிய நேரடி முதலீட்டை தாராளமயமாக்குதல், எளிதாக வணிகம் செய்வதை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் தனியார் முதலீட்டில் நிலையான வளர்ச்சிக்கு ஆதரவான நிலையை உருவாக்கியுள்ளன. இதன் விளைவாக, பொருளாதாரத்தில் ஒட்டுமொத்த முதலீட்டு விகிதம் 2022-23ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 29.2 சதவீதமாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளப்பட்டது.
கோவிட்-19 பாதிப்பால், 2020-21 நிதியாண்டின் இறுதியில் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்திற்கான கடன் 89.6 சதவீதமாக அதிகரித்தது. பிறகு, கடன் படிப்படியாகக் குறைந்து மார்ச் 2023 இறுதியில் 81 சதவீதத்தை எட்டியது. அதிகப்படியான வருவாய் சேகரிப்பு, செலவினங்களை மறுசீரமைத்தல் மற்றும் தொற்றுநோய்க்குப் பிந்தைய ஆண்டுகளில் வலுவான உண்மையான ஜிடிபி வளர்ச்சி ஆகியவை கடன் சரிவுக்கு வழிவகுத்தன.
ஜனவரி 26, 2024 நிலவரப்படி, பிரதமரின் முத்ரா திட்டத்தின் கீழ் ரூ.27.38 டிரில்லியன் அளவுக்கு 46.15 கோடிக்கும் அதிகமான கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. முத்ரா திட்டம் தொடர்பான புகார்கள் அந்தந்த வங்கிகளுடன் கலந்தாலோசித்து நிவர்த்தி செய்யப்படுகின்றன. மையப்படுத்தப்பட்ட பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பில் பெறப்பட்ட புகார்களும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தீர்வுக்காக அந்தந்த வங்கிகளிடம் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. இந்த திட்டம் வங்கிகள் கடன் வழங்குவதை அதிகரிப்பதில் வெற்றி பெற்றுள்ளது.
பிரதமரின் ஜன்தன் வங்கிக் கணக்கு திட்டத்தின் கீழ் ஜனவரி 17, 2024 நிலவரப்படி, 2,17,218 கோடி ரூபாய் வைப்புத் தொகையுடன் மொத்தம் 51.61 கோடி ஜன்-தன் கணக்குகள் திறக்கப்பட்டுள்ளன. இவற்றில், 28.60 கோடி (55.5 சதவீதம்) ஜன்-தன் கணக்குகள் பெண்களுக்கானவை. சுமார் 34.41 கோடி (66.8 சதவீதம்) கணக்குகள் கிராமப்புற மற்றும் சிறிய நகர்ப்புற பகுதிகளில் தொடங்கப்பட்டுள்ளன" என தெரிவித்துள்ளார்.