புனே: இந்திய வாகன சந்தையில் கைனடிக் லூனா மின்சார வாகனமாக வரும் 7-ம் தேதி அறிமுகமாக உள்ளது. இதற்கான முன்பதிவு ஜனவரி 26-ம் தேதி தொடங்கியது. இந்த வாகனத்தை வாங்க விரும்புபவர்கள் ரூ.500 டோக்கன் கட்டணமாக செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.
கடந்த 1972-ல் இந்தியாவில் கைனடிக் லூனா இருசக்கர வாகனம் அறிமுகமானது. இந்த மொபட் வாகனம் மக்களிடையே அதீத வரவேற்பை பெற்றது. டிஎஃப்ஆர் பிளஸ் முதல் சூப்பர் மாடல் வரையில் மொத்தமாக ஐந்து மாடல் லூனாவில் அப்போது அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது. கால ஓட்டத்தில் லூனாவை காட்டிலும் சிறந்த சிசி திறன் கொண்ட வாகனங்களின் வருகை காரணமாக சந்தை நிலை மாறியது. இந்த சூழலில் தான் மின்சார வாகன வடிவில் கைனடிக் லூனா இந்தியாவில் அறிமுகமாக உள்ளது.
இ-லூனாவின் டாப் ஸ்பீட் மணிக்கு 50 கிலோ மீட்டர் என தெரிகிறது. இதன் ரேஞ்ச் 110 கிலோ மீட்டர். கிராமம் முதல் நகரம் வரையில் உள்ள அனைத்து தரப்பு வாடிக்கையாளர்களையும் டார்கெட் செய்து இந்த வாகனம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த வாகனத்தின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.70,000 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 7-ம் தேதி அறிமுகமான பிறகே வாகனத்தின் இதர அம்சங்கள் வெளியாகும்.
கைனடிக் கிரீன் எனர்ஜி மற்றும் பவர் சொல்யூஷன்ஸ் சார்பில் இந்த வாகனம் சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மின்சார வாகன பிரிவில் தங்கள் நிறுவனத்துக்கு விற்பனை ரீதியாக இ-லூனா அறிமுகம் ஊக்கம் தரும் என அந்நிறுவனம் நம்புவதாக தெரிகிறது.