புழுதிக்குடியில் தண்ணீரை எதிர்நோக்கி காத்திருக்கும் தாளடி நெல் வயல். 
வணிகம்

நீரின்றி கருகும் 30,000 ஏக்கர் தாளடி பயிர்களால் பதறும் விவசாயிகள் - மேட்டூர் அணை திறக்கப்படுமா?

எஸ்.கோபாலகிருஷ்ணன்

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, கோட்டூர், முத்துப்பேட்டை வட்டாரங்களில் ஆற்றில் நீர்வரத்து இன்றி இருப்பதால், 30 ஆயிரம் ஏக்கரில் தாளடி நெற்பயிர்கள் பாதிப்புக்குள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

திருவாரூர் மாவட்டத்தில் நிகழாண்டில் 93 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தாளடி சாகுபடி நடைபெற்றது. குறிப்பாக, 115 நாட்கள் வயதுடைய ஏடிடி 51, ஏடிடி 45 ஆகிய நெல் ரகங்களை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். தற்போது 30 நாட்கள் முதல் 50 நாட்கள் வயதுடைய பயிர்களாக அவை வளர்ந்து நிற்கின்றன.

குறிப்பாக இந்த பயிர்கள் கதிர்கள் வெளிவந்த நிலையிலும், கதிர் வைப்பதற்கு பால் பிடித்த நிலையிலும் உள்ளன. இந்த சூழலில் நெற் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சினால்தான் பயிர்கள் நல்ல மகசூலை கொடுக்கும். இன்னும் 2 முறையாவது வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டிய கட்டாயத்தில் விவசாயிகள் உள்ள நிலையில், மேட்டூர் அணை மூடப்பட்டு விட்டதால் ஆற்றில் நீர் வரத்தின்றி வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

வாய்ப்புள்ள விவசாயிகள், ஜனவரி முதல் வாரத்தில் பெய்த மழைநீரை வாய்க்கால்களில் தேக்கி வைத்து, அவற்றை மோட்டார் பம்ப் மூலம் வயலுக்கு இறைத்து, தங்களது பயிர்களை காப்பாற்றி வருகின்றனர். இதற்கும் வாய்ப்பு இல்லாத விவசாயிகள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். எனவே, மேட்டூர் அணையிலிருந்து உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து புழுதிக்குடி முருகையன், பூசலங்குடி உலகநாதன், சோழங்கநல்லூர் வீரமணி ஆகியோர் கூறியது: தாளடி நெற்பயிர்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழைதான் தற்போது வரை பயிர்களின் பசுமையை பிடித்து வைத்திருக்கிறது. இன்றைய சூழலில் தாளடி அறுவடை செய்வதற்குள் இன்னும் இரண்டு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

இன்னும் ஓரிரு நாட்கள் சென்றால் முற்றிலும் நெற்பயிர்கள் கருகத் தொடங்கி விடும். வாய்ப்பு உள்ள விளைநிலங்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ.250 செலவு செய்து மோட்டார் பம்புகள் மூலம் வடிகால்கள், வாய்க்கால்கள், குட்டைகளில் தேங்கிய நீரை பாய்ச்சி வருகிறோம். இந்த வாய்ப்பு பல விவசாயிகளுக்கும் கிடைப்பதில்லை.

எனவே, மேட்டூர் அணையில் தற்சமயம் உள்ள 70.79 அடி தண்ணீரை பயன்படுத்தி உடனடியாக தண்ணீர் திறந்தால்தான், தாளடி நெற்பயிரை பாதுகாக்க முடியும். அதுமட்டுமின்றி, கோடை காலத்தில் பொதுமக்களின் அன்றாட பயன்பாட்டுக்கும் கால்நடைகளின் குடிநீர் தேவைக்கும் இந்த மேட்டூர் அணை திறப்பு உதவி செய்யும். எனவே உடனடியாக மேட்டூர் அணையை திறக்க வேண்டும். டீசல் மானியம் வழங்க வேண்டும் என்றனர்.

SCROLL FOR NEXT