புதுடெல்லி: சாட்டிலைட் மூலம் இணைய சேவை வழங்கும் எலான் மஸ்கின் ‘ஸ்டார்லிங்க்’ சேவை இந்தியாவில் தனது சேவையை வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான அனுமதியை அரசு கூடிய விரைவில் வழங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க நாட்டை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது ஸ்பேஸ்-X நிறுவனம். இந்நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் புராஜக்ட் வழியே சுமார் 70 நாடுகளில் சாட்டிலைட் மூலம் அதிவேக இணைய சேவையை வழங்கி வருகிறது. அதற்கான அங்கீகாரத்தையும் ஸ்பேஸ்-X பெற்றுள்ளது. உலகம் முழுவதும் இந்த சேவையை விரிவு செய்வதே அந்நிறுவனத்தின் நோக்கம். இந்நிலையில், ஸ்டார்லிங்க் இணைய சேவை இந்தியாவில் தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கு முன்னதாக பலமுறை இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவை குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அண்மையில் இந்தியாவின் தனியார் டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான வோடபோன் ஐடியா (விஐ) நிறுவனம், ஸ்டார்லிங்க் உடன் வர்த்தக ரீதியாக இணைய உள்ளதாக தகவல் வெளியானது. அது குறித்த விளக்கத்தை செபி வசம் விஐ தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இந்திய தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு துறையின் நம்பிக்கையை ஸ்டார்லிங்க் பெற்றுள்ளதாக தகவல். ஜியோ சாட்டிலைட் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் ஒன்வெப்பை அடுத்து சாட்டிலைட் சார்ந்த தகவல் தொடர்பு சேவைக்காக உரிமம் பெற உள்ள மூன்றாவது நிறுவனமாக ஸ்டார்லிங்க் திகழ்கிறது. உரிமம் வழங்கப்பட்டால் இந்திய தொலைத்தொடர்பு துறையில் புதிய வகையிலான முன்னேற்றம் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான உரிமம் இறுதிகட்டத்தில் உள்ளதாகவும் தகவல். டெலிகாம், தகவல் தொடர்பு என சம்பந்தப்பட்ட துறை சார்ந்த முக்கியஸ்தர்கள் வெளிநாட்டில் இருந்து இந்தியா திரும்பியதும் அனுமதி வழங்கப்படும் என சொல்லப்படுகிறது.