வணிகம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் சம்பா அறுவடை தொடக்கம் - 107 இடங்களில் நெல் கொள்முதல் செய்ய திட்டம்

கே.சுரேஷ்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் சம்பா நெல் அறுவடை தொடங்கி உள்ளது. 107 இடங்களில் நேரடி நெல் கொள் முதல் நிலையங்கள் மூலம் நெல் கொள் முதல் செய்ய நுகர்பொருள் வாணிபக் கழகம் திட்டமிடப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் 2.5 லட்சம் ஏக்கரில் சம்பா நெல்சாகுபடி செய்யப்பட்டது. தற்போது கதிர் முற்றிய வயல்களில் அறுவடை பணி தொடங்கி உள்ளது. சில பகுதியில் மட்டும் அறுவடை தாமதமாகும். ஆவுடையார் கோவில், மணமேல்குடி போன்ற வட்டாரங்களில் தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது.எனினும், அறுவடை பணி தொடங்கியுள்ளதால் தாமதமின்றி நெல் கொள்முதல் பணியைத் தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் விவசாய அணி மாநிலத் தலைவர் சி.ரங்கராஜன் கூறியது: நெல் அறுவடை பணி தொடங்கி உள்ளதால், தாமதமின்றி நெல் கொள்முதல் பணியை நுகர்பொருள் வாணிபக் கழகத்தினர் தொடங்க வேண்டும். அதேசமயம், கொள் முதல் நிலையங்களுக்கு நெல் மூட்டைகளை கொண்டு வரும் விவசாயிகளை அலைக்கழிக்காமல் விரைவாக கொள்முதல் செய்ய வேண்டும். இடைத் தரகர்களின் குறுக்கீடு முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.

மேலும், அறுவடை பணிக்கு அறுவடை இயந்திரம் பற்றாக்குறை உள்ளது. இதனால், அறுவடைக்கான கூலியும் அதிகமாக உள்ளது. எனவே, வேளாண் பொறியியல் துறையினர் வெளி மாவட்டங்களில் இருந்து கூடுதல் அறுவடை இயந்திரங்களை வரவழைக்க வேண்டும். ஒரே மாதிரியாக அனைவரிடமும் கட்டணம் வசூலிக்கும் வகையில் அறுவடைக் கூலியை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றார்.

இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலர்கள் கூறியது: புதுக்கோட்டை மாவட்டத்தில் சம்பா நெல்லை கொள்முதல் செய்வதற்கு வேளாண் துறை அளித்துள்ள விளைச்சல் விவரங்களின் அடிப்படையில் மாவட்டத்தில் குளத்தூர், கறம்பக்குடி ஆகிய வட்டங்களில் தலா 24 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட உள்ளன.

இதேபோல, கந்தர்வக்கோட்டையில் 12, இலுப்பூர் மற்றும் விராலி மலையில் தலா 11, அறந்தாங்கியில் 6, புதுக்கோட்டை, திருமயத்தில் தலா 5, ஆலங்குடியில் 4, பொன்னமராவதியில் 3, மணமேல்குடி மற்றும் ஆவுடையார்கோவிலில் தலா 1என மொத்தம் 12 வட்டங்களில் மொத்தம் 107 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சாகுபடி பரப்பளவு அதிகம் இருந்தும், அறுவடை பணி குறைவாக இருப்பதால் மணமேல்குடி மற்றும் ஆவுடையார்கோவில் வட்டங்களில் தலா 1 இடத்தில் கொள்முதல் நிலையம் திறக்கப்பட உள்ளது. இவ்வட்டங்களில் தேவைப்பட்டால் கொள்முதல் நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

SCROLL FOR NEXT