தஞ்சாவூர்: பொங்கல் பண்டிகை சமயத்திலும் வாழைத்தார் விற்பனை மிகவும் குறைந்துள்ளதால் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். பொங்கல் பண்டிகை அன்று பொதுமக்கள் புத்தாடை அணிந்து புதுப்பானையில் பொங்கலிட்டு கொண்டாடுவது வழக்கம்.
இந்த பொங்கல் பண்டிகையில் முக்கிய இடத்தை பிடித்து இருப்பது கரும்பு, மஞ்சள் கொத்து, வாழைப்பழம் தான். இதற்காக பொங்கல் பண்டிகைக்கு ஒரு வாரத்துக்கு முன்னதாக வாழைத்தார் அறுவடை செய்யப்படும். அந்தவகையில், தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, பாபநாசம், கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழை சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் குறிப்பாக பொங்கல் பண்டிகைக்கு மக்கள் விரும்பி வாங்கும் பூவன் ரக வாழை தான் அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக பொங்கல் பண்டிகையின்போது வாழைப்பழ விற்பனை மிகவும் குறைந்துள்ளதால், விலையும் வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட வாழை விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் வடுககுடி மதியழகன் கூறியது: பொங்கல் பண்டிகைக்கு பூவன் ரக வாழைப்பழம்தான் அதிகளவில் விற்பனையாகும். இதற்காக திருவையாறு உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் பூவன் ரகம்தான் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது வாழைத்தார் அறுவடை நடந்து வருகிறது.
ஆனால், பொங்கல் பண்டிகைக்கு ஆண்டுக்கு ஆண்டு வாழைத்தார் விற்பனை குறைந்து கொண்டே வருகிறது. இதனால் விலையும் குறைந்துள்ளது. கடந்தாண்டு பொங்கல் பண்டிகையின்போது ஒரு வாழைத்தார் ரூ.400 முதல் ரூ.700 வரை விற்பனையானது. நிகழாண்டு ரூ.250 முதல் ரூ.500 வரை மட்டுமே விலைபோகிறது.
விவசாயிகளிடமிருந்து மொத்தமாக வாழைத்தார்களை வாங்கும் வியாபாரிகளும் குறைவாகவே வாங்கி சில்லறை விற்பனையில் ஈடுபடுகின்றனர். இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது என்றார்.