வணிகம்

பொம்மை ஏற்றுமதியில் இந்தியா முன்னிலை

செய்திப்பிரிவு

புதுடெல்லி: தன்னிறைவு காணும் வகையில் மத்திய அரசு எடுத்து வரும் பல்வேறுமுயற்சிகளின் காரணமாக இந்தியாஇன்று பொம்மை ஏற்றுமதியில் உலக முன்னிலை வரிசை நாடுகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது என தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு துறையின் செயலர் ராஜேஷ் குமார் சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டு அவர் பேசியதாவது:

பிரதமர் நரேந்திர மோடியின் அரசு உள்ளூர் தயாரிப்புகளை ஊக்குவிப்பதன் மூலம் தன்னிறைவு அடைய பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது. அதன் பயனாக, பொம்மை ஏற்றுமதியில் இந்தியா இன்று உலகளவில் ஒரு வலுவான போட்டியாளராக மாறியுள்ளது.

எட்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாடுகளிலிருந்து அதிகளவில் பொம்மை இறக்குமதி செய்யப்பட்ட நிலை இன்று மாறியுள்ளது. மாறாக ஏற்றுமதி பன்மடங்கு உயர்ந்துள்ளது.

மோடி பிரதமராக பொறுப்பேற்ற 2013-14 மற்றும் கடந்த 2022-23 காலகட்டத்தில் பொம்மைகள் இறக்குமதி 48 சதவீதம் குறைந்து 159 மில்லியன் டாலராகவும், அதேநேரம் ஏற்றுமதி 293 சதவீதம் அதிகரித்து 326 மில்லியன் டாலரையும் எட்டியுள்ளது லக்னோ ஐஐஎம் மேற்கொண்ட ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

பொம்மை துறையின் வெற்றிமற்ற துறைகளுக்கு எடுத்துக்காட்டான ஒன்றாக மாறியுள்ளது. பொம்மை சந்தையில் சீனாவின் தரம் குறைந்த பொருட்களை கட்டுப்படுத்த இந்தியாவின் உற்பத்தி அதிகரிப்பு பெரிதும் உதவியுள்ளது. அதன்படி, 2014-15-ல் 260 மில்லியன் டாலராக இருந்த நாட்டின் பொம்மை இறக்குமதி 2022-23-ல் 39 மில்லியன் டாலராக சரிவடைந்துள்ளது.

இந்திய பொம்மைகள் தற்போது அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ), ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளின் சந்தைகளை ஆக்கிரமித்து வருகிறது. இவ்வாறு ராஜேஷ் குமார் சிங் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT