உதகை: நீலகிரி மாவட்டத்தில் விளையும் பசுந்தேயிலைக்கு டிசம்பர் மாத விலையாக குறைந்த பட்சம் கிலோவுக்கு ரூ.15.40 என நிர்ணயம் செய்து இந்திய தேயிலை வாரியம் அறிவித்துள்ளது.
இது குறித்து இந்திய தேயிலை வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நீலகிரி மாவட்டத்தில் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறு, சிறு விவசாயிகள் தேயிலை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள், தோட்டங்களில் பறிக்கும் பசுந்தேயிலையை தனியார் தேயிலைத் தொழிற்சாலைகள் மற்றும் கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
இதற்கான விலை நிர்ணயத்தை இந்திய தேயிலை வாரியம் மாத இறுதியில் வெளியிடுவது வழக்கம். அதன் படி நவம்பர் மாதம் தேயிலைத் தொழிற்சாலைகள் கொள்முதல் செய்த பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச விலையாக கிலோவுக்கு ரூ.15.34 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் உற்பத்தி செய்யப்பட்ட தேயிலையின் ஏல விற்பனை அடிப்படையில் இந்த விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.