கிருஷ்ணகிரி / ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முள்ளங்கி மகசூல் குறைந்து விலை அதிகரித்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 4,735 ஏக்கர் பரப்பளவில் முள்ளங்கி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக ஓசூர், தேன்கனிக்கோட்டை, தளி, கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம் மற்றும் போச்சம்பள்ளி பகுதியில் விவசாயிகள் முள்ளங்கி சாகுபடி செய்து வருகின்றனர். 50 நாட்களில் முள்ளங்கி அறுவடைக்குக் கிடைக்கும் என்பதால், இச்சாகுபடியை விவசாயிகள் பெரிதும் விரும்புகின்றனர்.
வெளி மாநிலங்களில் விற்பனை: இங்கு அறுவடையாகும் முள்ளங்கி கர்நாடக மாநிலம் பெங்களூரு, ஆந்திரா மாநிலம் குப்பம் மற்றும் சென்னை, திருச்சி, வேலூர், மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் விற்பனைக்குச் செல்கின்றன. இதேபோல, விவசாயிகளிடமிருந்து வெளியூர் வியாபாரிகள் நேரடியாகக் கொள்முதல் செய்வதால், விவசாயிகளுக்குப் போக்குவரத்து உள்ளிட்ட சந்தை செலவுகள் குறை கின்றது.
முள்ளங்கி மகசூல் மற்றும் சந்தை வரவேற்பு ஆகியவற்றின் அடிப்படையில் விலை ஏற்ற இறக்கத்தில் இருக்கும். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கிலோ ரூ.10-க்கு விற்பனையான நிலையில், தற்போது கிலோ ரூ.30-க்கு மேல் விற்பனையாகி வருகிறது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
குறுகிய காலத்தில் வருவாய் - இது தொடர்பாக போச்சம் பள்ளியைச் சேர்ந்த விவசாயி கமலக் கண்ணன் கூறியதாவது: குறுகிய காலத்தில் வருவாய் கிடைப்பதாலும், வியாபாரிகள் நேரடியாகத் தோட்டத்துக்கு வந்து கொள்முதல் செய்வதாலும், முள்ளங்கி சாகுபடி விவசாயிகளுக்குப் பெரிதும் உதவி வருகிறது. ஏக்கருக்கு 80 முதல் 100 மூட்டைகள் ( ஒரு மூட்டையில் 50 கிலோ இருக்கும் ) வரை அறுவடை செய்யப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு நடவு, பராமரிப்பு, அறுவடை கூலி என ரூ.30 ஆயிரம் வரை செலவாகிறது.
கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் சாகுபடி செய்யப்பட்ட முள்ளங்கி தற்போது அறுவடைக்கு வந்துள்ளது. கடந்த காலங்களை விட மகசூல் குறைந்துள்ளது. இருந்த போதும் தரத்தைப் பொறுத்து கிலோ ரூ.30 முதல் ரூ.60 வரை விலை கிடைக்கிறது. இதனால், விவசாயிகளுக்கு ஓரளவுக்கு வருவாய் கிடைக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.