ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் செயல்படும் 6 உழவர் சந்தைகளில், கடந்த 9 மாதத்தில் ரூ.48 கோடிக்கு காய்கறிகள் விற்பனையானது.
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு சம்பத் நகர், பெரியார் நகர், பெருந்துறை, கோபி, சத்தியமங்கலம், தாளவாடி என 6 இடங்களில் உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், தாங்கள் விளைவிக்கும் காய்கறிகளை இங்கு கொண்டு வந்து நேரடியாக விற்பனை செய்து வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் செயல்படும் 6 உழவர் சந்தைகளிலும், கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் இறுதி வரை 15 ஆயிரத்து 756 டன் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டிருந்தது. ரூ.48 கோடியே 25 லட்சத்து 94 ஆயிரத்துக்கு காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 22 லட்சத்து 88 ஆயிரத்து 849 பொதுமக்கள், 55,165 விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர்.
ஈரோடு சம்பத் நகர் உழவர் சந்தையில் மட்டும் ரூ.18 கோடியே 51 லட்சத்து 36 ஆயிரத்துக்கு காய்கறிகள் விற்பனையானது. 25,360 விவசாயிகள், 9. 86 லட்சம் வாடிக்கையாளர்கள் வந்து சென்றதாக உழவர் சந்தை அலுவலர்கள் தெரிவித்தனர்.