கோவை: சோளம் சாகுபடியில் அதிக மகசூல் பெறுவது தொடர்பாக விவசாயிகளுக்கு வேளாண் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக கோவை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் கு.பெருமாள்சாமி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: கோவை மாவட்டத்தில் 26,088 ஹெக்டேர் பரப்பளவில் சோளம் சாகுபடி செய்யப்படுகிறது. சிறு தானியமான சோளம் நீரிழிவு நோய், செரிமான குறைபாடுகள், ரத்த சோகையில் இருந்து நம்மை காக்கிறது. நமது உடலுக்கு தேவையான இரும்பு சத்து, கால்சியம், புரதம், கொழுப்பு, தயாமின், நியாசின் சத்துகள் உள்ளன.
இது சர்க்கரையை குறைக்கும் தன்மையை கொண்டது. உடலில் உள்ள உப்பை குறைக்கும். சோளத்தை மார்கழி பட்டம் எனப்படும் டிசம்பர் - ஜனவரி மாதங்களில் சாகுபடி செய்யலாம். சிறந்த ரகங்களான கே12, சிஓ 32 ரகங்கள் சிபாரிசு செய்யப்படுகிறது. நீர் பாசனத்தில் சாகுபடிக்கு இரண்டரை ஏக்கருக்கு 10 கிலோ விதை தேவை. நிலத்தை நன்கு உழுது பயன்படுத்த வேண்டும். அடியுரமாக யூரியா 100 கிலோ சூப்பர் பாஸ்பேட் 280 கிலோ பொட்டாசியம் 72 கிலோ இரண்டரை ஏக்கருக்கு கடைசி உழவில் இட வேண்டும்.
விதை மூலம் பரவும் நோய்களை கட்டுப்படுத்த பத்து கிலோ விதைக்கு 100 கிராம் சூடோமோனாஸ் புளுரசென்ஸ் மற்றும் அசோஸ்பைரில்லம், பாஸ்போ பேக்டீரியம் உயிர் உரங்களுடன் விதை நேர்த்தி செய்து வரிசைக்கு வரிசை ஒன்றரை அடி இடைவெளியும் செடிக்கு செடி அரையடி இடைவெளியும் இருக்குமாறு விதைகள் ஊன்ற வேண்டும். மண்ணின் ஈரப்பதத்தை பொறுத்து நீர் பாய்ச்ச வேண்டும். 30-ம் நாள் மற்றும் 45-ம் நாட்களில் களைகளை எடுக்க வேண்டும்.
தனிச்சோள பயிர் எனில் விதைத்த 3-ம் நாள் அட்ரசின் களைக் கொல்லி இரண்டரை ஏக்கருக்கு 500 கிராம் என்ற அளவில் காலை வேளையில் பின்னோக்கி தெளிக்க வேண்டும். மேலுரமாக விதைத்த 15-ம் நாள், 30-ம் நாட்களில் இரண்டரை ஏக்கருக்கு 50 கிலோ யூரியா இரு முறை இட வேண்டும். குருத்து ஈ இளம் பருவத்தில் தென்பட்டால் 12 கருவாட்டுப் பொறியை இரண்டரை ஏக்கருக்கு வைக்க வேண்டும். மேலும், மீதைல் ஓ டெமட்டான் 25 சிசி 500 எம்.எல் அல்லது டை மீதவோட் 30 இசி 500 எம்.எல் தெளித்து கட்டுப்படுத்தலாம்.
தண்டு துளைப்பானை கட்டுப்படுத்த விளக்குப் பொறியை நடு இரவு வரை வைத்து தண்டு துளைப்பான், தானிய ஈ மற்றும் கதிர்ப் புழு ஆகியவற்றில் இருந்து அந்துப் பூச்சிகள் கவர்ந்து அழிக்கலாம். செடிகள் பூக்கும் தருணத்தில் பிராபிகோனசோல் 500 கிராம் அல்லது மான்கோசெப் இரண்டரை ஏக்கருக்கு 1 கிலோ என்ற அளவில் தெளிக்க வேணடும். சோளம் சாகுபடியில் உயர் மகசூல் பெறுவது தொடர்பான மேலும் விவரங்களுக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்களை அணுகலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.