வணிகம்

நகரமயமாக்கல் முறைகளில் சீனாவை பின்பற்றக் கூடாது: நிதி ஆயோக் துணைத் தலைவர் கருத்து

செய்திப்பிரிவு

சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருப்பதை போல நகரமயமாக்கல் முறைகளை இந்தியா பின்பற்ற கூடாது. நாடு முழுவ தும் வளர்ச்சிக்கான மையங்களை இங்கு ஏற்படுத்த வேண் டும் என நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: நகரமயமாக்கலுக்காக வெளிநாட்டில் பின்பற்றப்படும் முறைகளை நாம் அப்படியே பிரதி எடுத்து வருகிறோம். வெளிநாட்டு முறைகளை நாம் பின்பற்ற கூடாது. இந்தியா போன்ற பன்முக தன்மை வாய்ந்த நாட்டில் நகர மயமாக்கலில் அதிக கவனம் செலுத்தும் பட்சத்தில் ஏற்றத் தாழ்வுகள் அதிகரிக்கும். சீனா என்ன செய்திருக்கிறதோ அதனை இந்தியா செய்யக் கூடாது. சீனாவில் வளர்ச்சி என்பது கடற்கரை சார்ந்த பகுதிகளில் மட்டுமே இருக்கிறது. மற்ற பகுதிகள் இன்னும் பின் தங்கியே இருக்கிறது. ஒவ்வொரு சீன புத்தாண்டு அன்றும் கடற்கரை பகுதிகளில் இருந்து லட்சகணக்கான மக்கள் நாட்டின் உள்பகுதிக்கு செல்வதை பார்க்க முடியும். இதுபோன்ற நாடாக இந்தியாவை மாற்றக்கூடாது. இந்தியாவில் தீபாவளி, ஹோலி பண்டிகை நாட்களில் மக்கள் அதிகளவு இடம்பெயருவதற்கான சூழ்நிலையை நாம் உருவாக்க கூடாது.

இந்தியாவில் நகரங்களுக்கு முழுமையான அதிகாரம் இல்லை. மேயர்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்குவதை உயிர்ப்பிக்க வேண்டும். மற்ற நாடுகளில் இருப்பது போல இந்தியாவில் நகர மேயர்களுக்கு அதிக அதிகாரம் இல்லை. நியூயார்க் நகரத்தின் முன்னாள் மேயர் மைக் புளும்பெர்க் போல இந்தியாவில் மேயர்களின் பெயரை நாம் நினைவில் வைத்து கொள்வதில்லை. தற்போது மேயர்களுக்கான அதிகாரத்தை வழங்க வேண்டும் என ராஜீவ் குமார் கூறினார்.

SCROLL FOR NEXT