வணிகம்

வணிக நூலகம்: தாமதிக்காதே!

ஆர்.வேங்கடபதி

தா

மதம் சில நேரங்களில் வாழ்க்கையையே புரட்டிப் போட்டுவிடும். உயிர் காக்கும் முயற்சியில் கண நேர தாமதம் சாவை வரவேற்கும். திருமணத்திற்கு தாமதமாக செல்பவர்கள் மணமக்கள் அற்ற மணமேடையை மட்டுமே காணமுடியும். விளையாட்டு மைதானத்திற்குத் தாமதமாகச் செல்பவர்கள் விளையாட்டைப் பார்க்க முடியாது வெறும் மைதானத்தை மட்டுமே பார்க்க முடியும். அதுபோல தாமதம் என்பது பல நிகழ்வுகளில் பல வகையான காட்சிகளை வெளிப்படுத்தும். அவைகளை நுணுகிப்பார்த்தால் சிறிய மாற்றங்கள் நமக்குள் பெரிய விளைவுகளை ஏற்படுத்துவதை உணரலாம். கடைசி பரீட்சை அன்று நன்றாக தூங்கி எழும் மாணவன் ஒரு பரீட்சை அல்ல வாழ்வையே தொலைத்து விடுகிறான்.

இதுபோன்ற சிறு மாறுதல்களை நமக்குள் ஏற்படுத்திக் கொள்வதைப் பற்றி நூலாசிரியர் வெகு விரிவாக வெகு அழகாக சில குறிப்புகளை தருகின்றார். டயானா டெலோன்ஸார் ( DIANA DELONZOR) என்ற இந்த நூலாசிரியர் உளவியல் ஆய்வுகளை மேற்கொண்டு மனித மனங்களை வகைப்படுத்த பல புத்தகங்களை எழுதியுள்ளார். அதில் ஒரு புத்தகம் தான் தாமதிக்காதே. அடையாளங்களை குறிப்பிட்டு அந்த அடையாளங்களை பயன்பாட்டில் எப்படி மேற்கொள்வது என்பதற்கு ஆறுவகையான காரணிகளை எடுத்துக் கூறுகிறார். இந்த ஆறும் தினம் தோறும் சந்திக்க கூடிய அருமையான செயல்களாகவே இருக்கின்றன. ஆனால் அசட்டையாகவும் அதீத கற்பனை வளத்துடனும் செயல்படும் பொழுது இந்த ஆறும் எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்துகின்றன.

1. நடவடிக்கைகளுக்கு சரியான காரணங்களை கூறுதல் அவசியம்

2. எல்லாவற்றையும் வேகமாகச் செய்து முடிப்பேன் - மறக்க வேண்டிய ஒன்று

3. வார்த்தைகளுக்கான அர்த்தங்களுக்கு மறு சிந்தனை அவசியம்

4. சிறிது நேரம் முன்னதாக செல்லுதல் தவறுகளை திருத்திக் கொள்ள உதவும்.

5. தொலைநோக்கு மற்றும் எதிர்கால சிந்தனைகளை வசப்படுத்த வேண்டும்.

6. முயற்சி திருவினையாக்கும்

நடவடிக்கைகளுக்கு சரியான காரணங்களை கூறுதல் அவசியம்: பணிக்கோ, பொருள் வாங்கவோ, விழாவிற்கோ செல்லும் போது கடக்க வேண்டிய தூரத்தை கணக்கிட்டு மிகச் சரியாக செல்வதாக சிலர் கூறிக் கொள்வது உண்டு. ஆனால், அவர்கள் எதிர்பாராத விதமாக போக்குவரத்து நெரிசல் அல்லது வாகனம் நிறுத்தும் இடம் தொலைவில் அமைந்திருத்தல் அல்லது உடன் இருப்பவர்கள் வேகமாக நடக்க முடியாமல் இருத்தல் ஆகியவை சரியான நேரத்திற்கு செல்வதை தடுத்து தாமதத்தை கூட்டும். அது போன்ற நேரங்களில் நாம் எடுக்க கூடிய நடவடிக்கைகளுக்கு அல்லது செய்யக் கூடிய செயல்களுக்கு விளக்கம் கூறி தோராயமான அளவு மணித்துளிகளை ஒதுக்கி குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாக இலக்கை அடைந்து தாமதத்தைத் தவிர்க்கலாம்.

எல்லாவற்றையும் வேகமாக செய்து முடிப்பேன் - மறக்க வேண்டிய ஒன்று: எந்த செயலையும் வேகமாக செய்து முடிக்கும் எண்ணம் உள்ளவர்கள் செயல்களில் ஈடுபடும் பொழுது வேகத்தை தொலைத்து விடுகிறார்கள். ஏனென்றால், குறிப்பிட்ட நேரங்களில் மணம் சொல்வதை தளர்ச்சியான உடல் கேட்காது. வெகு வேகமாக வேலைகளை முடித்து அன்றைய தினம் விரைவில் உறங்கச் செல்வேன் என்று வேகமாகப் பணியாற்றுபவர்கள் தடுமாறி தூக்கத்தையும் தொலைத்து தங்களுடைய உடல் செயல்பாடுகளின் வேகத்தையும் குறைத்துக் கொள்கிறார்கள். எனவே, செய்யும் செயல்களில் வேகத்தை கூட்டுவதை காட்டிலும் செயல்களுக்கான நேரத்தை கூட்டுவதில் கவனம் தேவை.

வார்த்தைகளுக்கான அர்த்தங்களுக்கு மறு சிந்தனை அவசியம்: கூட்டம் இரண்டு மணிக்கு கூடுகிறது என்று சொல்வதைக் காட்டிலும், நிகழ்ச்சியின் திரை இரண்டு மணிக்கு விலகும் என்று மனதில் பதிவு செய்வது அவசியம். இரவு உணவு ஏழரை மணிக்கு எடுத்துக் கொள்வேன் என்பதைக் காட்டிலும் இரவு உணவிற்காக ஏழரை மணிக்கு அமர்வேன் என்று சொல்வது வார்த்தைகளுக்கான அர்த்தத்தை மாற்றுவதோடு தாமதத்தை தவிர்க்க உதவும்.

சிறிது நேரம் முன்னதாக செல்லுதல் தவறுகளை திருத்திக் கொள்ள உதவும்: குறிப்பிட்ட நேரத்தில் செல்வதை சிலர் வாடிக்கையாக வைத்து இருப்பார்கள். ஆனால், அது வேடிக்கையாக போகக் கூடிய தருணம் அதிகம். உதாரணமாக மிக முக்கியமான ஒரு கூட்டத்திற்கு இரண்டு நிமிடங்கள் தாமதமாகச் சென்றால் கூட தாமதமே. இரண்டு நிமிடம் என்பதற்காக அதை எளிதாக எடுத்துக்கொள்வதோ மன்னிப்பதோ முடியாது. எனவே, சேர வேண்டிய இடத்திற்கு பத்து நிமிடங்கள் முன்னதாக சென்று அந்த இடத்தின் சூழ்நிலை மற்றும் செயல்பாடுகளை தெரிந்து கொள்வதன் மூலம் படபடப்பையும் வேக நடைமுறைகளையும் மாற்றிக்கொண்டு தாமதத்தைத் தவிர்க்கலாம். எதிர்பாராத நிகழ்வுகளுக்கு மற்றும் நம்மைத் தயார் செய்து கொள்வதற்கு சிறிது நேரம் ஒதுக்குவது என்பது காரியத்தில் மிகப் பெரிய வெற்றியைத் தரும்.

தொலைநோக்கு மற்றும் எதிர்கால சிந்தனைகளை வசப்படுத்த வேண்டும்: பெரும்பாலும் தாமதம் எதிர்கால சிந்தனைகளைத் தவிர்ப்பதால் ஏற்படுகிறது. நிகழ்காலத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் நேரத்தை நிகழ்காலத்திலேயே சொல்லி தாமதத்திற்கு வழிதேடிக்கொள்கிறார்கள். மாறாக, முன்னோக்கி நிகழ்வுகளை நிரல்படுத்தும் பொழுது ஏற்படக்கூடிய தாமதங்களை சரிவரச் சிந்தித்து தவிர்ப்பதற்கு வழிகள் ஏராளம். ஒரு பல்கலைக்கழகத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு செல்வதற்கு சரியான நேரத்தில் சென்று சேர்ந்துவிட்டு அதன் பிறகு அருகில் உள்ள துறையை சென்று அடையக் கூடிய நேரம் தாமதத்தைக் கூட்டுகிறது. தாமதத்தைத் தவிர்க்க அந்த நேரத்தையும் சேர்த்து கணக்கிட்டு முன்னதாகவே திட்டமிட்டிருந்தால் தாமதமாக சென்று மூக்கை உடைத்துக் கொள்ள அவசியம் ஏற்படாது. உதாரணமாக புதிய விலாசம் திருமண நிகழ்வுகள் கல்லூரியில் உள்ள துறைகள், விடுமுறை நாட்கள், சாலையில் ஏற்படக்கூடிய வாகன நெரிசல் இவை அனைத்தையும் முன்னதாகவே மனதில் கொண்டு அடைய வேண்டிய இடத்தை அடைந்தால் தாமதம் தவிர்க்கப்படும்.

முயற்சி திருவினையாக்கும்: தாமதமே தாரக மந்திரமாக எல்லா நிகழ்வுகளுக்கும் எப்படியோ நேரம் ஆகிவிடுகின்றது என்று பரபரப்பாகவும், படபடப்பாகவும் செல்பவர்கள் சிறிய மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். ஏதேனும் ஒரு குறிப்பிட்ட நிகழ்வுக்கு மேலே குறிப்பிட்ட காரணிகளைப் பின்பற்றி சிறிது நேரம் முன்னதாக அந்த இடத்தை அடைந்து செயல் பாடுகளை சரிவர நிறைவேற்றும் பொழுது கிடைக்க கூடிய உணர்வுகளை பதிவு செய்தல் அவசியம். அந்த இடத்தில் தாமதமாக வருவதைப் பார்த்து மற்றவர்கள் எந்த வகையில் தங்கள் செயல்களைப் பதிவு செய்கிறார்கள் என்று மனதில் குறித்துக் கொள்வதும் அவசியம். மற்றவர்கள் தாமதமாக வரும் பொழுது நாம் குறித்த நேரத்திற்கு முன் செல்லும் பொழுது நம்முடைய உணர்வுகள் எப்படி இருக்கின்றது என்பதை மனதில் வாங்கிக்கொள்ளும் பொழுது அடுத்த முறை தாமதம் தடுக்கப்படுகிறது.

பிரெஞ்சு பழமொழி ஒன்று “ஒரு மனிதனைக் காத்திருக்க செய்தல் நம்முடைய பலவீனத்தை வெளிப்படுத்துகிறது” என்று கூறுகிறது. மற்றவர்களுடைய நேர இழப்பு பணி இழப்பு, மரியாதை, தகுதி ஆகியவைகளை மனதில் கொண்டு செயல்படும் பொழுது தாமதம் தானாகத் தவிர்க்கப்படும்.

rvenkatapathy@rediffmail.com

SCROLL FOR NEXT