வணிகம்

பதிவுகள் 2013: வீறு கொண்ட காளை, ஜொலிக்காத தங்கம்!

செய்திப்பிரிவு

ஆண்டு முடிவடைய இன்னும் ஐந்து நாள்களே உள்ளன. நாட்டின் பொருளாதாரத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கும் பங்குச் சந்தையும், தங்க வர்த்தகமும் எப்படி இருந்தது என்பதைப் பார்த்தாலே, பொருளாதார நிலையைப் புரிந்து கொள்ள முடியும். 2013-ம் ஆண்டில் பங்குச் சந்தை முதலீடுகளுக்கு 9 சதவீத லாபம் கிடைத்துள்ளது. அதேசமயம் தங்க முதலீடுகளுக்கு 3 சதவீத லாபமே கிடைத்துள்ளது. அதே சமயம் வெள்ளி 24 சதவிகிதம் வரைக்கும் சரிந்துவிட்டது.

தங்கத்தில் முதலீடு செய்தது லாபகரமானதாக அமையாததற்குக் காரணம் டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு ஸ்திரமாக இல்லாததே. அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் தனது மானியத்தைக் குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு கடந்த சில மாதங்களாக நீடித்ததும் ரூபாயின் மதிப்பு ஸ்திரமற்ற நிலையில் இருந்ததற்கு முக்கியக் காரணமாகும். அதேசமயம் பங்குச் சந்தையில் அன்னிய முதலீடு

(எப்ஐஐ) அதிகரித்திருந்ததும் பங்குச் சந்தை எழுச்சிக்குக் காரணமாக அமைந்தது.

இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவிலும் தங்கத்தின் மீதான முதலீடு லாபகரமானதாக அமையவில்லை. அதேசமயம் பங்குச் சந்தைகள் வழக்கம்போல சரிவிலிருந்து மீண்டு முதலீட்டாளர்களுக்கு லாபகரமாக அமைந்ததாக ரெலிகரே செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் சில்லறை விநியோகப் பிரிவின் தலைவர் ஜெயந்த் மாங்கலிக் தெரிவித்தார்.

பொதுவாக பங்குச் சந்தையும், தங்கமும் எதிரெதிர் முகாமிலிருப்பவை. பங்குச் சந்தை லாபமீட்டும்போது, தங்கம் லாபகரமானதாக அமையாது. இந்த ஆண்டும் இது விதிவிலக்காக அமையவில்லை என்று அவர் மேலும் கூறினார்.

2012-ம் ஆண்டில் பங்குச் சந்தை மூலமான லாபம் 25 சதவீத அளவுக்கு இருந்தது. ஆனால் தங்க முதலீட்டு லாபம் 12.95 சதவீத அளவுக்கு இருந்தது. வெள்ளி முதலீட்டு லாபம் 12.84 சதவீதம் என்ற அளவிலேயே கடந்த ஆண்டு இருந்தது. டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு கடுமையான சரிவைச் சந்தித்தபோது அதைத் தடுக்க ரிசர்வ் வங்கி கடுமையான நடவடிக்கையை எடுத்தது. இதனால் பங்குச் சந்தையில் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் ஏற்றம் பெற்றது.

ஆண்டு இறுதியில் அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் தனது ஊக்க நடவடிக்கைகளைக் குறைப்பதாக அறிவித்தபோது அதன் தாக்கம் பங்குச் சந்தையில் லேசாக தெரிந்தது. இருப்பினும் ஏற்கெனவே திட்டமிட்டபடி இந்த நடவடிக்கை எடுப்பதாகவும், தேவைப்பட்டால் ஊக்க நடவடிக்கைகள் தொடரும் என ஃபெடரல் அறிவித்தபிறகே பங்குச் சந்தைகளில் ஏற்றம் காணப்பட்டது.

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி எடுத்த உறுதியான நடவடிக்கைகள் பங்குச் சந்தை வர்த்தகத்துக்கு ஊக்கம் கொடுப்பதாக அமைந்தது. இது தவிர, நடப்புக் கணக்குப் பற்றாக்குறையைக் குறைக்க அரசு எடுத்த உறுதியான நடவடிக்கைகளும் பங்குச் சந்தை எழுச்சிக்குக் காரணமாக அமைந்தன என்று பொனான்ஸா போர்ட்போலியோ நிறுவனத்தின் இணை மேலாளர் ஹிரேன் தஹன் கூறினார்.

நடப்புக் கணக்குப் பற்றாக்குறையைக் குறைக்க தங்கம் இறக்குமதியைக் குறைக்க அரசு எடுத்த நடவடிக்கைகள் பலனைத் தந்துள்ளன. இருந்தபோதிலும் தங்க முதலீடு பங்குச் சந்தையுடன் ஒப்பிடுகையில் லாபகரமானதாக அமையவில்லை. இது தவிர, வங்கிகள் தங்கம் இறக்குமதி செய்வதற்கும் ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகளை விதித்தது. அத்துடன் தங்கம் வாங்குவதற்கு வங்கிகள் கடன் அளிக்க வேண்டாம் என அறிவுறுத்தியது.

அதிகரித்துவரும் நடப்பபுக் கணக்குப் பற்றாக்குறையைக் குறைக்க பொதுமக்கள் உதவ வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரமே கோரிக்கை விடுத்திருந்தார். கடந்த 15 ஆண்டுக் கால வரலாற்றில் தங்கம் 12 ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க லாபகரமான முதலீடாக இருந்துள்ளது. இது தவிர, கடந்த 10 ஆண்டுகளில் தங்கத்தின் மதிப்பு ஆண்டுக்கு 20 சதவீதம் உயர்ந்துள்ளது.

பங்குச் சந்தையில் தேக்க நிலை நிலவும்போது பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை முதலீட்டாளர்கள் தேர்வு செய்தால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிக்கும் என்று சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க பொருளாதாரத்தில் மீட்சி ஏற்படுவதற்கான அறிகுறிகள் தெரிவதே பங்குச் சந்தை உயர்வுக்குக் காரணம் என்று தஹன் குறிப்பிட்டார். பொதுவாக அச்சம் விலகும் போது, பொறாமை மேலோங்கும். இதுதான் இப்போது நடந்துள்ளது. பங்குச் சந்தை பாதுகாப்பான முதலீடாக இல்லை எனும்போது தங்கத்தில் முதலீடு செய்யப்பட்டது. அமெரிக்க ஃபெடரலோ அதிக சிக்கலான முதலீடுகளை மேற்கொண்டது என்று அவர் மேலும் கூறினார்.

தங்கத்தின் விலை 10 கிராம் ரூ. 30,990-லிருந்து ரூ. 30,160 ஆகக் குறைந்துவிட்டது. இதேபோல வெள்ளியின் விலை கிலோ ரூ. 57,000-லிருந்து ரூ. 43,500 ஆகக் குறைந்துவிட்டது. பொதுத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் பங்குச் சந்தைகள் தங்களது ஸ்திரமான நிலையை வெளிப்படுத்த முனைகின்றன என்று ரெலிகரேயின் மாங்கலிக் தெரிவித்தார். மத்தியில் தனிப் பெரும்பான்மையோடு ஆட்சியைப் பிடிக்கும் கட்சிதான் பங்குச் சந்தையில் ஸ்திரமான சூழல் உருவாக வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது. ஸ்திரமான ஆட்சி அமையும்போதுதான் அன்னிய முதலீடு பங்குச் சந்தையில் அதிகரிக்கும் என்பதும் தெரியவந்துள்ளது.

2014-ம் ஆண்டின் முதல் பாதியில் வெளிப்புற பாதிப்புகளால் இந்திய பங்குச் சந்தை பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உள்நாட்டில் பொதுத் தேர்தல் உள்ளிட்ட காரணிகளும் பங்குச் சந்தையை பாதிக்கும். உள்நாடு மற்றும் வெளிநாட்டு பிரச்சினைகள் பங்குச் சந்தையை பாதித்தாலும் இரண்டாவது பிற்பாதியில் இரட்டை இலக்க வளர்ச்சி இருக்கும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். 2013-ம் ஆண்டில் இதுவரை பங்குச் சந்தையில் அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் (எப்ஐஐ) ரூ.1.28லட்சம் கோடி முதலீடு செய்துள்ளன.

SCROLL FOR NEXT