வணிகம்

வரத்து அதிகரிப்பால் தக்காளி கிலோ ரூ.20-க்கு விற்பனை @ ஈரோடு

செய்திப்பிரிவு

ஈரோடு: ஈரோடு காய் கறிச் சந்தைக்கு வரத்து அதிகரிப்பால், தக்காளி விலை சரிந்து, கிலோ ரூ.20-க்கு விற்பனையானது.

ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் செயல்படும் நேதாஜி காய்கறிச் சந்தையில், 700-க்கும் மேற்பட்ட கடைகள் செயல்படுகின்றன. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகாவில் இருந்தும் இங்கு காய் கறிகள் வரத்தாகின்றன. குறிப்பாக, தாளவாடி, திருப்பூர், ஒட்டன் சத்திரம், ஆந்திரா, கர்நாடகா போன்ற பகுதிகளில் இருந்து, ஈரோட்டுக்கு தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

ஈரோடு காய்கறிச் சந்தைக்கு தினமும் சராசரியாக 3,000 பெட்டிகள் ( ஒரு பெட்டி 30 கிலோ ) வரை தக்காளி வரத்தாகும் நிலையில், நேற்று 7,000 பெட்டிகள் வரத்தாகின. மொத்த விற்பனையில் நேற்று முன்தினம் ஒரு பெட்டி தக்காளி ரூ.600-க்கு விற்பனையான நிலையில், நேற்று ரூ.400-க்கு விற்பனையானது.

இதனால், தக்காளியின் விலை சரிந்து கிலோ ரூ.20-க்கு விற்பனையானது. விலை குறைந்ததால், தக்காளி விற்பனை அதிகரித்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். ஈரோடு மாவட்டம் தாளவாடி காய்கறிச்சந்தையில் நேற்று தக்காளி கிலோ ரூ.16-க்கு விற்பனையானது.

SCROLL FOR NEXT