கோவையில் கட்டிட மேற்கூரையில் அமைக்கப்பட்டுள்ள சோலார் பேனல்கள். | படம்: ஜெ.மனோகரன் | 
வணிகம்

‘ரூஃப் டாப்’ சூரிய ஒளி ஆற்றல் உற்பத்திக்கு நெட்வொர்க் கட்டணம் விதிக்க வலுக்கும் எதிர்ப்பு

இல.ராஜகோபால்

கோவை: சுற்றுச்சூழலை பாதுகாக்க உதவும் கட்டிட மேற்கூரை (ரூஃப் டாப்) சூரியஒளி ஆற்றல் உற்பத்தி திட்டங்களை ஊக்குவிப்பதற்கு பதில் நெட்வொர்க் கட்டணம் என்ற பெயரில் வசூலிப்பது பசுமை திட்டங்களுக்கு மாறுவோருக்கு அபராதம் விதிப்பதற்கு சமம் என, தமிழ்நாடு மின்நுகர்வோர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். தமிழகத்தின் தினசரி மின்நுகர்வு 16 ஆயிரம் மெகாவாட்டாக உள்ளது. தொடர்ந்து அதிகரித்துவரும் மின்தேவையை பூர்த்தி செய்வதில் சூரியஒளி, காற்றாலை உள்ளிட்ட மரபுசாரா ஆற்றல் உற்பத்தித்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழகத்தில் காற்றாலை பிரிவில் 9,000 மெகாவாட், சூரியஒளி ஆற்றல் உற்பத்தியில் 4,500 மெகாவாட் உற்பத்தி செய்வதற்கான கட்டமைப்பு வசதிகள் உள்ளன.

தமிழ்நாட்டில் காற்றாலைகள் மூலம் 6 மாதங்கள் மின்உற்பத்தி செய்யப்படுகிறது. சூரியஒளி மூலம் ஆண்டு முழுவதும் மின்உற்பத்தி செய்யப்படுகிறது. தரைப் பகுதிகள் மட்டுமின்றி கட்டிடங்களின் மேற்கூரைகளிலும் சோலார் பேனல்கள் அமைத்து மின்உற்பத்தி செய்ய உதவும் ‘மேற்கூரை சூரியஒளி ஆற்றல் உற்பத்தி திட்டம்’ தொழில்முனைவோர் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இத்தகைய திட்டங்களுக்கு அரசு ஊக்குவிக்கும் என எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் நெட்வொர்க் கட்டணம் என்ற பெயரில் பணம் வசூலிக்கப்படும் முறை தொழில்முனைவோர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு மின்நுகர்வோர் சங்கத்தின் (டீகா) தலைவர் பிரதீப் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது: சுற்றுச்சூழலை பாதுகாக்க உதவும் சூரியஒளி, காற்றாலை உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். தரைப்பகுதியில் ஒரு மெகாவாட் சூரியஒளி ஆற்றல் உற்பத்தி திட்டத்தை செயல்படுத்த ரூ.4.5 கோடி மற்றும் அதற்கு மேல் செலவாகும். கட்டிட மேற்கூரையில் அமைக்கப்படும் சூரியஒளி ஆற்றல் உற்பத்தி திட்டத்திற்கு ரூ.3 கோடி தேவைப்படும். தமிழகத்தில்கட்டிட மேற்கூரைகளில் அமைக்கப்படும் சூரியஒளி ஆற்றல் உற்பத்தி திட்டங்களை செயல்படுத்த தொழில்முனைவோர் பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தங்களுக்கு சொந்தமான இடத்தில், ஒவ்வொருவரும் பல கோடி ரூபாய் செலவிட்டு இத்தகைய திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில், தமிழக அரசு அவற்றை ஊக்குவிப்பதற்கு பதில் நெட்வொர்க் கட்டணம் என்ற பெயரில் பணம் வசூலித்து வருவது தொழில்முனைவோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நடவடிக்கை பசுமை திட்டங்களுக்கு மாற நினைப்பவர்களுக்கு அபராதம் விதிப்பது போன்றது. எனவே, நெட்வொர்க் கட்டணம் விதிக்கப்படுவதை முற்றிலும் நீக்க வேண்டும் அல்லது எம்எஸ்எம்இ தொழில் பிரிவை சேர்ந்த நிறுவனங்களுக்கு அவர்கள் நிறுவனம் செயல்படும் நாட்களில் சூரியஒளி மூலம் மின் உற்பத்தி செய்து பயன்படுத்துவதற்கு கட்டணம் வசூலிக்க கூடாது.

பொது விடுமுறை உள்ளிட்ட நிறுவனங்கள் செயல்படாத நாட்களில் உற்பத்தி செய்யப்பட்டு மின்வாரியத்திற்கு வழங்கும் மின்சாரத்திற்கு மட்டும் குறைந்த அளவு நெட்வொர்க் கட்டணத்தை பெற வேண்டும். நிதி நெருக்கடியால் பல்வேறு தொழில்துறைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு இப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும். இல்லையெனில் தமிழகத்தில் முதலீடுகள் வெகுவாக குறையும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT