வணிகம்

பாமாயில் இறக்குமதியை தடை செய்ய விவசாய சங்கம் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

ஓசூர்: ஓசூரில் விவசாய முன்னேற்றக் கழகம் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் நிறுவன தலைவர் ராஜா மணி கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் 20 கோடிக்கும் அதிகமான தென்னை மரங்கள் உள்ளன. இதனால், இந்தியாவிலேயே தென்னை விவசாயம் அதிகம் உள்ள மாநிலம் நமது மாநிலம் தான். மத்திய அரசு ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மூலம் கொப்பரை தேங்காயை தென்னை விவசாயிகளிடம் இருந்து இதுவரை 1 லட்சம் டன்னுக்கு மேல் கொள்முதல் செய்துள்ளது.

ஒரு கிலோ கொப்பரை தேங்காயை ரூ.108-க்கு விலைக்கு வாங்குகிறது. கொள்முதல் செய்யப்பட்ட தேங்காயை வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்வதற்காக மத்திய அரசு முடிவு செய்து ரூ.80 விலை நிர்ணயித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இதனால் வியாபாரிகள் கொப்பரை தேங்காய் விலையை குறைத்து கொடுக்க மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. மத்திய அரசு வெளி மார்க்கெட்டில் கொப்பரை தேங்காயை விற்றால் தென்னை விவசாயிகளுக்கு பெருத்த இழப்பு ஏற்படும்.

எனவே மத்திய அரசு பாமாயில் இறக்குமதியை முற்றிலும் தடை செய்து, அதிக அளவில் தேங்காய் எண்ணெய்யை உற்பத்தி செய்து ரேஷன் கடைகள் மூலம் விற்க வேண்டும். மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்து உள்ளதை உடனடியாக நீக்க வேண்டும். தமிழகத்தில் புயல் காரணமாக நெற்பயிர்கள் நீரில் மூழ்கி பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.17 ஆயிரம் அறிவித்துள்ளதை ரூ.35 ஆயிரமாக வழங்க வேண்டும். தமிழகத்தில் சிப்காட் நிறுவனம் விரிவாக்கத்திற்காக கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப் பள்ளி நாகமங்கலம் அயர்னப் பள்ளி ஆகிய ஊராட்சிகளில் 5-வது சிப்காட் அமைப்பதற்கு 3 ஆயிரம் ஏக்கர் விலை நிலங்களை கையகப்படுத்த முடிவு செய்துள்ளது. இதனை உடனடியாக கைவிட வேண்டும், என அவர் கூறினார்.

SCROLL FOR NEXT