புதுச்சேரி குமரகுருபள்ளம் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் பிரிக்காஸ்ட் கற்களை பயன்படுத்தி கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்பு. படம்: எம்.சாம்ராஜ் 
வணிகம்

புதுச்சேரி அரசு சார்பில் முதன் முறையாக பிரிக்காஸ்ட் கற்களை பயன்படுத்தி அடுக்குமாடி குடியிருப்பு பணி

செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: புதுச்சேரி அரசின் சார்பில் முதன்முறையாக பிரிக்காஸ்ட் கற்களைப் பயன்படுத்தி ரூ.45.5 கோடியில் 216 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு பணிகள் நடக்கிறது. செங்கல்லுக்கு மாற்றாக பயன்படும் இக்கற்கள் 50 ஆண்டுகளுக்கு சேதமாகாது. குறித்த காலத்துக்குள் கட்ட இயலும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.

புதுச்சேரி ராஜ்பவன் தொகுதியில் 45 அடி சாலையிலுள்ள குமரகுருபள்ளத்தில் இருந்த அடுக்குமாடி குடியிருப்புகளில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வந்தனர். இக்குடியிருப்பு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. கட்டிடம் பழுதடைந்திருந்ததால் அடிக்கடி தளத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்தன. இதனால் அங்கு வசித்த மக்கள் அச்சத்தில் இருந்தனர்.

இக்குடியிருப்பை இடித்துவிட்டு புதிதாக கட்டித் தர கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.45.5 கோடியில் பொதுப்பணித்துறை மூலம் அப்பகுதியில் 2 கட்டிடங்களாக 12 தளங்களுடன் 216 வீடுகள் கட்டும் பணி கடந்த ஜனவரியில் தொடங்கப்பட்டது. வழக்கமாக செங்கல், சிமென்ட் வைத்து கட்டிடம் கட்டுவது வழக்கம். தற்போது மணல் தட்டுப்பாடு, செங்கல், சிமென்ட் விலை உயர்வு ஆகியவற்றால் செங்கல்லுக்கு மாற்றாக பிரிக்காஸ்ட் கற்களை பயன்படுத்தியுள்ளனர்.

இது பற்றி பொதுப் பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு, “செங்கலுக்கு மாற்றாக இன்டர்லாக், ஏஓசி, பிரிக்காஸ்ட், ஹாலோ பிளாக் ஆகியவற்றின் மூலம் கட்டிடங்கள் கட்டப்படுகின்றன. இதனால் கட்டுமான செலவு குறையும். பணிகளும் விரைவாக முடியும். இதுவரை தனியார் கட்டிடங்கள் மட்டுமே இக்கற்களை பயன்படுத்தி கட்டினர். புதுச்சேரியில் முதன்முறையாக அரசு தரப்பில் பிரிக்காஸ்ட் கற்களைக் கொண்டு 12 தளங்களுடன் கூடிய 2 கட்டிடங்களாக அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படுகிறது.

இந்த குடியிருப்பிலுள்ள ஒரு வீடு 400 சதுர அடியில் அமையும். அதில் வரவேற்பு, சமையலறை, சிறிய அறை, கழிப்பறை அடங்கியிருக்கும். இங்கு பயன்படுத்தப்படும் பிரிக்காஸ்ட் கற்கள் காஞ்சியில் தயாராகி வருகிறது. இதர கற்களைப் போல் இல்லாமல் குடியிருப்பு அமையவுள்ள இடத்தை அளவீடு செய்தோம். அதன்படி சுவர், வாசல், ஜன்னல் அளவீடு செய்வோம். அதற்கு ஏற்றால்போல் சுவர் போன்று பெரிய அளவில் பிரிக்காஸ்ட் அமைப்பு தயாராகி வரும்.

இதைப் பொருத்த பெரிய கிரேன் இருக்கிறது. தயாராகி வருவதை கிரேன் மூலம் தூக்கி சென்று வீட்டின் சுவருக்கு பதில் பொருத்தி தளம் ஒட்டப்படுகிறது. செங்கல்லில் செய்வதைப் போன்று பிளம்பிங், எல்க்ட்ரிசிட்டி பணிகள் செய்யலாம். இதனால் பணிகள் விரைவாக நடக்கிறது. ஏற்கெனவே பல தனியார் நிறுவனங்கள் இக்கற்களை வணிக வளாகங்கள் கட்ட புதுச்சேரியில் பயன்படுத்தியுள்ளன. தரத்தை ஆய்வு செய்தோம். சோதனைக்கு உட்படுத்தி பார்த்தோம். அதற்கு பிறகே அனுமதி தந்தோம். 50 ஆண்டுகளுக்கு இக்கற்கள் சேதம் ஆகாது. குறித்த காலத்துக்குள்ளும் கட்டிடப் பணிகளை நிறைவு செய்வோம்” என்று குறிப்பிட்டனர்.

SCROLL FOR NEXT