வணிகம்

கவுதம் அதானியின் சொத்து மதிப்பு 7 நாளில் 10 பில்லியன் டாலர் உயர்வு: உலக பணக்காரர் வரிசையில் 16-வது இடம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானியின் நிகர சொத்து மதிப்பு 7 நாட்களில் மட்டும் 10 பில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் ரூ.83,000 கோடி அதிகரித்துள்ளதாக ப்ளூம்பெர்க் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ப்ளூம்பெர்க் மேலும் கூறியுள்ளதாவது: கவுதம் அதானியின் சொத்து மதிப்பு 7 நாட்களில் 10 பில்லியன் டாலர் உயர்ந்துள்ளது. இதையடுத்து அவரது நிகர சொத்து மதிப்பு தற்போது 70.3 பில்லியன் டாலரை (ரூ.5.83 லட்சம் கோடி) எட்டியுள்ளது.

சொத்து மதிப்பு கணிசமாக உயர்ந்துள்ளதையடுத்து உலக பணக்காரர் பட்டியலில் கவுதம் அதானி 4 இடங்கள் முன்னேறி 16-வது இடத்தை பிடித்துள்ளார். ப்ளூம்பெர்க் பணக்காரர் பட்டியலில் 90.4 பில்லியன் டாலர் (ரூ.7.50 லட்சம் கோடி) சொத்து மதிப்புடன் முகேஷ் அம்பானி 13-வது இடத்தில் உள்ளார்.

இவருக்கு அடுத்தபடியாக டாப் 20 பட்டியலில் இரண்டாவது இந்தியராக கவுதம் அதானி இடம்பெற்றுள்ளார்.

அதானி குழுமத்தின் 10 நிறுவனங்களும் இரண்டாவது வாரமாக இந்த வாரமும் ஏற்றத்துடன் வர்த்தகமாகின. இதையடுத்து அவற்றின் ஒட்டுமொத்த சந்தை மூலதனம் ரூ.13 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது.

குறிப்பாக, அதானி கிரீன் எனர்ஜி 20 சதவீதம் அதிகரித்து ரூ.1,348-க்கும், அதானி எனர்ஜி 16.38 சதவீதம் உயர்ந்து ரூ.1,050-க்கும், அதானி டோட்டல் கேஸ் 15.81 சதவீதம் அதிகரித்து ரூ.847.90-க்கும், அதானி எண்டர்பிரைசஸ் 10.90 சதவீதம் உயர்ந்து ரூ.2,805-க்கும் வர்த்தகமாகின.

இவ்வாறு ப்ளூம்பெர்க் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT