வணிகம்

2030-ல் இந்தியா பெரிய பொருளாதார நாடாகும்: சர்வதேச எஸ் அண்ட் பி குளோபல் நிறுவனம் கணிப்பு

செய்திப்பிரிவு

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் எஸ் அண்ட் பி குளோபல் நிறுவனம் சர்வதேச பொருளாதாரம் குறித்து ஆய்வு நடத்தி 62 பக்க அறிக்கையை வெளியிட்டு உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

ரஷ்யா- உக்ரைன் போர், இஸ்ரேல் - ஹமாஸ் போர், அமெரிக்கா- சீனா இடையிலான பதற்றம் உள்ளிட்ட பிரச்சினைகள் சர்வதேச பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளன. இந்த பிரச்சினைகளால் சர்வதேச அளவில் உணவு பொருட்கள், பெட்ரோலிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.

அடுத்த ஆண்டு சீனாவின் பொருளாதார வளர்ச்சி 4.6 சதவீதமாக இருக்கும். அந்த நாட்டின் வீட்டு வசதி துறை பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக அடுத்த ஆண்டு சீனாவின் பொருளாதார வளர்ச்சி 3 சதவீதமாகக் குறையக்கூடும். சீனாவில் வரும் 2026-ல் பொருளாதார வளர்ச்சி 4.6 சதவீதமாகவும் இருக்கும்.

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் சீனாவுடனான வர்த்தகத்தை கணிசமாக குறைத்துள்ளன. தென்சீனக் கடல் விவகாரம், தைவான் பிரச்சினைகளால் சர்வதேச அரங்கில் சீனா பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறது.

அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி நடப்பு 2023-ம் ஆண்டில் 2.4 சதவீதமாக இருக்கும். 2024-ல் 1.5%, 2025-ல் 1.4%, 2026-ல் 1.8 சதவீதமாக மட்டுமே இருக்கும். ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டன், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சியும் அமெரிக்காவை போன்றே பின்தங்கிய நிலையில் உள்ளன.

அதேநேரம் சர்வதேச பொருளாதாரத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக இந்தியா உருவெடுத்து உள்ளது. நடப்பு 2023-ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.4 சதவீதமாக இருக்கும்.

வரும் 2024-ம் ஆண்டிலும் 6.4. சதவீத பொருளாதார வளர்ச்சியை அந்த நாடு எட்டும். வரும் 2025-ம் ஆண்டில் 6.9 சதவீதத்தையும் வரும் 2028-ம் ஆண்டில் 7 சதவீத பொருளாதார வளர்ச்சியையும் இந்தியா எட்டும்.

அடுத்த 3 ஆண்டுகள் அதிவேகமாக வளரும் நாடாக இந்தியா விளங்குகிறது. தற்போது சேவைத்துறை வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்தும் அந்த நாடு, படிப்படியாக உலகின் உற்பத்தி மையமாக மாறிவருகிறது.

இந்தியாவின் திறமைவாய்ந்த தொழிலாளர்கள், பெண் தொழிலாளர்களின் பங்களிப்பால் அந்த நாடு அபார வளர்ச்சி அடைந்து வருகிறது. அந்த நாட்டில் டிஜிட்டல் பொருளாதாரம் அபரிமிதமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகின்றன. அடுத்த 10 ஆண்டுகள் சர்வதேச நிதிச் சேவை, நுகர்வோர் தொழில்நுட்பத்தில் இந்தியா கோலோச்சும். இந்தியாவின் ஆட்டோமொபைல் துறையும் அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.

உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகள் வரிசையில் இந்தியா தற்போது 5-வது இடத்தில் இருக்கிறது. வரும் 2030-ம் ஆண்டில் உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும்.

இவ்வாறு எஸ் அண்ட் பி குளோபல் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT