திருப்பூர்: பல்லடம் அருகே கரைப்புதூர் ஊராட்சி குன்னங்கல்பாளையத்தில் பொதுசுத்திகரிப்பு நிலையத்தில் புதிய ஜீரோ பர்சன்ட் கெமிக்கல் என்ற இயந்திரத்தின் ஒத்திகை ஓட்டம் நேற்று தொடங்கியது. இந்திய மற்றும் ஜெர்மனி தொழில் நுட்ப ஆராய்ச்சி மாணவர்கள் தயாரித்த சாயக்கழிவு நீர் சுத்திகரிப்பு இயந்திரத்தின் வெள்ளோட்டம், உலகிலேயே முதன்முறையாக திருப்பூரில் நேற்று நடந்தது. வெள்ளோட்டத்தை மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தொடங்கி வைத்து பார்வையிட்டார். இண்டோ ஜெர்மன் அறிவியல் தொழில்நுட்ப மையம் மூலம் உதவித்தொகை பெற்று, இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை, ஜெர்மனி கோயித் பல்கலைக்கழகம் ஆகிய ஆராய்ச்சி பல்கலைக்கழகங்களும், தமிழ்நாடு நீர் முதலீட்டு நிறுவனம், இப்கான் ஆகிய தொழிற்சாலைகளும் இணைந்து சாயக்கழிவு நீரை சுத்திகரிக்கும் புதிய இயந்திரம் ஒத்திகை பார்ப்பதற்கான முறையில் தயாரிக்கப்பட்டது. பொதுசுத்திகரிப்பு நிலையத்தில் இயந்திரம் பொருத்தப்பட்டு, அதற்கான ஒத்திகை நடைபெற்றது.
இனி வரும் காலங்களில் சாயக்கழிவு நீர் பாதிப்பு ஏற்படாது. ஏற்கெனவே ஜீரோ டிஸ்சார்ஜ் நடைமுறையில் உள்ளது. இந்த இயந்திரத்தின் மூலம் சாயக்கழிவுகளில் ஏற்படும் திடக்கழிவுகளை முற்றிலும் அகற்றும் வகையில் முயற்சி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறியதாவது: எதிர்காலத்தில் சிறிய சாயத்தொழிற்சாலைகள் மூலம் இத்தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குறைந்த கட்டணத்தில் சுத்திகரிக்க முடியும். இந்த தொழில்நுட்பம் ரசாயனங்களை பயன்படுத்தாமல், பாதுகாப்பாக நிறத்தை அகற்றுவதை உறுதிசெய்கிறது.
கரிமப் பொருட்களை அகற்றுவதுடன் சுற்றுச்சூழலுக்கான கவலைகளையும் நிவர்த்தி செய்கிறது. குறிப்பிடத்தக்க வகையில், உயிரியல் முறைகள் மற்றும் குளோரினேஷன் போன்றவற்றில் கசடு மற்றும் நச்சு துணைப் பொருட்கள் உருவாவதைத் தடுக்கிறது. சுற்றுச்சூழல் நட்பு கழிவுநீர் சுத்திகரிப்புக்கான புதிய தரநிலைகளை அமைக்கிறது, என்றனர். இதில் சென்னை ஐஐடி பேராசிரியர் இந்துமதி, ஜெர்மனியை சேர்ந்த பேராசிரியர் ஹென்னர் ஹோலர்ட், ஈரோடு, கரூர், திருப்பூர் தொழிற்சாலை உரிமையாளர்கள், தொடர்புடைய துறை அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.