சிவகாசி: மக்களவைத் தேர்தல் காரணமாக, அரசியல் கட்சியினரின் ஆர்டர்கள் அதிகரிப்பால் சிவகாசியில் 2024-ம் ஆண்டுக்கான காலண்டர் உற்பத்தி மும்முரமாக நடந்து வருகிறது. மின் கட்டண உயர்வால் காலண்டர் விலையில் 5 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சிவகாசி சுற்று வட்டாரப் பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட அச்சகங்கள் செயல் பட்டு வருகின்றன. இங்கு நோட்டு புத்தகம், டைரி, பஞ்சாங்கம், காலண்டர் ஆகியவை உற்பத்தி செய்யப்பட்டு வரு கின்றன. சிவகாசி அச்சகங்களில் ஆடி 18 அன்று புதிய ஆல்பம் வெளியிடப்பட்டு, காலண்டர் உற்பத்தி தொடங்கப்படும். அப்போது ஒவ்வொரு ஆண்டும் புதிய வடிவங்கள் அறிமுகப்படுத்தப்படும்.
அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடப்பதால், இந்த ஆண்டு வழக்கத்தை விட கூடுதலாக காலண்டர் ஆர்டர் வந்துள்ளதால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த ஆண்டு தமிழ், ஆங்கிலம், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் காலண்டர்கள் தயாராகி வருகின்றன. மாத காலண்டர், தினசரி காலண்டர், டேபிள் காலண்டர், மினி காலண்டர், போட்டோ பிரின்ட் காலண்டர் என பல்வேறு வடிவம் மற்றும் வண்ணங்களில் காலண்டர்கள் தயாரிக்கப்பட்டு வரு கின்றன. டிசம்பர் முதல் வாரத்திலேயே அடுத்த ஆண்டுக்கான காலண்டர் விற் பனை தொடங்கி விடும் என்பதால், சிவகாசியில் காலண்டர் உற்பத்தி மும் முரமாக நடந்து வருகிறது.
5 சதவீத விலை உயர்வு: கடந்த ஆண்டு மூலப்பொருட்கள் விலை உயர்வால் தினசரி காலண்டர் 40 சதவீதமும், மாத காலண்டர் 50 முதல் 55 சதவீதமும் விலை உயர்வு ஏற்பட்டது. இந்த ஆண்டு கூலி உயர்வு, மின் கட்டண உயர்வால் 5 சதவீதம் அளவுக்கு விலை உயர்ந்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு காலண்டர் உற்பத்தியாளர்கள் சங்கச் செயலாளர் ஜெய்சங்கர் கூறியதாவது: கடந்த ஆண்டு பல்வேறு காரணங் களால் 15 சதவீதம் அளவுக்கு காலண்டர் விற்பனை பாதிக்கப்பட்டது. தற்போது மின்கட்டண உயர்வால் 5 சதவீதம் விலை உயர்ந்துள்ளது. அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் வர இருப்பதால், இறுதிக்கட்ட விற்பனை வேகமெடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.