கோவை: நெட்வொர்க் தொடர்பான பிரச்சினைகள், தகவல்கள் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக பிரச்சினைகள் ஏற்படாத வகையில் சிறப்பான முறையில் ஸ்மார்ட் மீட்டர் திட்டம் அமல்படுத்தப்பட்டால், நுகர்வோருக்கு மிகுந்த பயன் தரும் என, நுகர்வோர் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
தற்போது 2 மாதங்களுக்கு ஒருமுறை மின்வாரிய ஊழியர்கள் வீடுகளுக்கு நேரில் சென்று மின் பயன்பாட்டைக் கணக்கெடுத்து வருகின்றனர். இதில் சில சமயங்களில் தவறுகள் நடப்பதால் நுகர்வோர் பாதிக்கப்படுகின்றனர். இப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், ஆளில்லாமல் மின் பயன் பாட்டைக் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட உள்ளன. மூன்று கட்டங்களாக இத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.
இது குறித்து தமிழ்நாடு மின் நுகர்வோர் சங்கத்தின் (டீகா) தலைவர் என்.பிரதீப் கூறியதாவது: ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படுவதால் தொழில்முனைவோர் தேவையின்றி அதிக மின்நுகர்வு செய்யப்படும் இடங்களை கண்டறிந்து ஆற்றல் சேமிப்பு மற்றும் மின் கட்டணத்திற்கு செலவிடும் தொகையை சேமிக்க முடியும். குறிப்பாக, மின்சாரம் வீணடிக் கப்படுவது தடுக்கப்படும்.
ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படுவதால் மின் கணக்கீட்டு முறை மிக துல்லியமாக இருக்கும். இதனால் ஆற்றல் மேலாண்மையில் சிறப்பாக செயல் பட வாய்ப்பு ஏற்படும். அதுமட்டுமின்றி ஆற்றல் தேவையை சரியான முறையில் திட்டமிடவும் முன்கூட்டியே கணிக்கவும் முடியும். இத்தகைய மீட்டர்கள் பொருத்தப்படுவதால் எதிர்வரும் காலங்களில் மின் கணக்கீடு மற்றும் கட்டணம் தொடர்பாக அளிக்கப்படும் புகார்கள் வெகுவாக குறையும். மொத்தத்தில் மின்நுகர்வோர் திருப்தியடைவர்.
வணிகத்திலும் நேர்மறை கருத்துக்கள் நிலவும். இவை எல்லாவற்றுக்கும் மேல் மின் கணக்கீடு உள்ளிட்ட பணிகளுக்கு தற்போது பயன்படுத்தப் பட்டு வரும் ஊழியர்கள் எண்ணிக்கை கணிசமாக குறையும். கணக்கீடு மற்றும் கட்டண நிர்ணய பணிகளில் மனித தவறுகள் தவிர்க்கப்படும். ஸ்மார்ட் மீட்டர்களால் பல்வேறு நன்மைகள் உள்ளதை மறுக்க முடியாது என்பதை போல,
இவற்றில் நெட்வொர்க் தொடர்பான பிரச்சினை, தகவல்கள் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக பிரச்சினை உள்ளிட்ட சில அபாயம் உள்ளதையும் மறுக்க முடியாது. இருப்பினும் சிறப்பான முறையில் திட்டம் அமல்படுத்தப்பட்டால் நுகர்வோருக்கு மிகவும் பயனளிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.