ஐசிசி மற்றும் அதன் ஒளிபரப்பு கூட்டாளிகளான டிஸ்னி ஸ்டார், 2023-ம் ஆண்டு இந்தியாவில் நடந்த ஆடவர் ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டித் தொடரில் மைதானத்துக்கு நேரில் வருகை தந்த மற்றும் ஒளிபரப்பு பார்வையாளர்களின் எண்ணிக்கையில் இதுவரையிலான சாதனைகளை முறியடித்துள்ளது.
ஸ்டேடியத்திற்கு நேரில் வந்து பார்த்த ரசிகர்களின் எண்ணிக்கை 48 ஆட்டங்களையும் சேர்த்து 12,50,307 (பனிரெண்டு லட்சத்து ஐம்பதாயிரத்து முந்நூற்று ஏழு). இது 2015-ம் ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து சேர்ந்து நடத்திய உலகக் கோப்பை பார்வையாளர்கள் எண்ணிக்கையான 10,16,420 (பத்து லட்சத்து 16 ஆயிரத்து 420) என்பதைக் கடந்து விஞ்சி நின்றது. சரி! 2019 உலகக்கோப்பை என்னவாயிற்று என்ற கேள்வி வருமே! ஆம், இந்த இரண்டிற்கும் முன் அது நிற்க முடியவில்லை. 7,52,000 பார்வையாளார்களுடன் இது மூன்றாம் இடத்தில் உள்ளது.
அதே போல் தொலைக்காட்சியில் 518 மில்லியன் பேர்கள் போட்டிகளைக் கண்டு மகிழ்ந்துள்ளனர். இந்த 6 வாரங்களில் தொலைக்காட்சியில் பார்வையாளர்கள் உலகக் கோப்பைக்காக விரயம் செய்தது 422 பில்லியன் நிமிடங்கள் என்கிறது டிஸ்னி ஸ்டார் புள்ளி விவரங்கள். இதன் மூலம் இதுவரை இல்லாத மிகப்பெரிய உலகக் கோப்பை 2023 உலகக் கோப்பை தான் என்று ஒளிபரப்பு நேயர்கள் ஆய்வுக் குழு தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான உலகக் கோப்பை இறுதிப் போட்டியை 300 மில்லியன் மக்கள் பார்த்துள்ளனர். அதிகபட்சமாக 130 மில்லியன் பேர் பார்த்தனர், இது டிஸ்னி ஸ்டார் அறிவிப்பின்படி டிவியில் அதிகம் பார்க்கப்பட்ட கிரிக்கெட் போட்டியாகும்.
இறுதிப் போட்டி டிஜிட்டல் பார்வையாளர்களின் சாதனைகளையும் முறியடித்தது, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் 59 மில்லியன் பார்வையாளர்களைப் பதிவுசெய்தது. இது எந்த நேரலை விளையாட்டு நிகழ்வுக்கும் பதிவான பார்வையாளர்களை விடவும் அதிகம்.
அதாவது பொழுதுபோக்கு என்பது உழைத்துக் களைத்த மானுட குலத்தின் வரப்பிரசாதமாக, இருத்தலியல்-உளவியல்- உடலியல் கட்டாயமாக இருந்தது போக இன்று நம் நேரத்தையே கபளிகரம் செய்யும் பலகோடி பில்லியன் டாலர்கள் முதலாண்மைத் துறையாக நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அசுர வளர்ச்சி கண்டுள்ளது. 422 பில்லியன் நிமிடங்கள் கிரிக்கெட் உலகக் கோப்பையைப் பார்ப்பதில் ஒரு நாடு செலவழித்தது என்றால் அது எவ்வளவு உழைப்பு நேரத்தைக் கபளிகரம் செய்துள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.
நம் உழைப்பினால் விளையும் முதலாண்மை உபரி குறித்து காரல் மார்க்ஸ் பேசினார். ஆனால், இன்று நாம் உழைக்காமல் விரயம் செய்த 422 பில்லியன் நிமிடங்களினால் லாபம் அடைந்த கார்ப்பரேட் முதலாண்மை நிறுவனங்களை நினைத்துப் பாருங்கள். உழைப்பின் மதிப்பை உயர்த்திப் பேசினார் காரல் மார்க்ஸ். இன்று உழைப்பின்மையின் உபரி விளைவைப் பற்றி அவர் உயிரோடு இருந்திருந்தால் வேறு ஒரு கோட்பாட்டை வடித்தெடுத்திருப்பார். உழைப்புச் சுரண்டல் என்னும் அவரது கோட்பாடு இன்று உழைப்பின்மையின் பொழுதுபோக்கு வகையறாச் சுரண்டலில் விளையும் உபரிமதிப்பு பற்றி பேசியிருக்கும்.
செயற்கை நுண்ணறிவு போற்றப்படுவதற்கு பல காரணிகளில் ஒன்று இந்தப் பொழுது போக்கு ராட்சத முதலாண்மை உலகளாவிய துறையின் அசுர வளர்ச்சியும் ஒரு காரணம். மீண்டும் உழைப்பின் பெருமையைப் பேசும் தத்துவச் சிந்தனையாளர்கள் தோன்றுவார்களா என்பது சந்தேகமே. பொழுது போக்குத் துறை இந்திய மாணவர்களின் அறிவு மற்றும் நேரம், இந்திய அடித்தட்டு மக்களின் உழைப்புத் திறன் ஆகியவற்றை காயடித்து அசுர வளர்ச்சி காணும் ஒரு அழிவாக்கத் துறையாக இருப்பது எந்த ஒரு தேசத்திற்குமே பேராபத்துதான்.