வணிகம்

ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகரிப்பு: குற்றாலம் வியாபாரிகள் மகிழ்ச்சி

செய்திப்பிரிவு

தென்காசி: சாரல் சீஸன் காலத்தில் குற்றால த்தில் சுற்றுலாப் பயணி கள் கூட்டம் அலைமோதும். இதனால் அங்கு கடை வைத்துள்ள வியாபாரிகள், விடுதி உரிமையாளர்கள், கார், வேன், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு வருவாய் அதிகரிக்கும். இந்த ஆண்டில் சாரல் சீஸன் தாமதமாக தொடங்கியது. பெரும் பாலான நாட்களில் அருவிகளில் குறைவாகவே தண்ணீர் விழுந்தது. இதனால் குற்றாலம் வியாபாரிகள் கவலையடைந்தனர். போதிய மழை பெய்யாததால் அணைகளும் நிரம்ப வில்லை.

இந்நிலையில், வடகிழக்கு பருவ மழையும் தாமதமாக தொடங்கியது. இருப்பினும் நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்து மாவட்டத்தில் பரவலாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. தொடர் மழையால் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. குற்றாலம் அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் ஏராளமான பக்தர்கள் குற்றாலம் வழியாக வந்து, அருவிகளில் நீராடிச் செல்வது வழக்கம். கார்த்திகை மாத தொடக்கத்தில் இருந்து குற்றாலத்தில் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.

நேற்று குற்றாலத்தில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் அருவிகளில் குளித்துச் சென்றனர். இதனால் குற்றாலத்தில் வியாபாரம் மீண்டும் களைகட்டத் தொடங்கியது. கடைவீதிகளில் கூட்டம் அதிகமாக இருந்தது. அருவிகளில் குளித்து விட்டு குற்றாலநாத சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பின்னர் அங்குள்ள கடைகளில் வாழைக்காய் சிப்ஸ், அல்வா, தின்பண்டங்கள் உள்ளிட்டவற்றை பக்தர்கள் வாங்கிச் சென்றனர். ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

SCROLL FOR NEXT