சான்பிரான்சிஸ்கோ: சாம் ஆல்ட்மேனை மீண்டும் சிஇஓ-வாக நியமிப்பதாக, ஓப்பன் ஏஐ நிறுவனம் அறிவித்துள்ளது.
ட்விட்டர் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் பிரெட் டெய்லர் புதிய இயக்குநர் குழுவுக்கு தலைமை வகிப்பார் என்றும் சம்மர்ஸ், ஆடம் ஆஞ்சல்லோ உள்ளிட்டோர் குழுவில் இடம்பிடிப்பர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாட்ஜிபிடி செயலியை உருவாக்கிய ஓப்பன் ஏஐ நிறுவனத் தின் சிஇஓ-வாக பதவி வகித்தவர் சாம் ஆல்ட்மேன். நிறுவன இயக்குநர் குழுவுக்கும் சாம் ஆல்ட்மேனுக்கும் கருத்து முரண்பாடு ஏற்பட்ட நிலையில், நிறுவனத்திலிருந்து அவர் நீக்கப்பட்டார்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் புதிய பாய்ச்சலான ‘சாட்ஜிபிடி’ அவரது தலைமைத்துவத்தின் கீழ்தான் உருவாக்கப்பட்டது. இதனால், இத்துறையின் மிக முக்கியமான முகமாக சாம் ஆல்ட்மேன் உள்ளார்.
இந்நிலையில் அந்நிறுவனத்திலிருந்து அவர் நீக்கப்பட்டது சர்வதேச அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. சாம் ஆல்ட்மேனின் நீக்கத்தைத் தொடர்ந்து அந்நிறுவனத்தின் தலைவர் கிரேக் ப்ரோக்மேன் உட்பட முக்கிய அதிகாரிகள் ராஜினாமா செய்தனர். ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் உட்பட பல தரப்பினர் சாம் ஆல்ட்மேனை மீண்டும் சிஇஓ-வாக நியமிக்க வலியுறுத்தி வந்தனர். ஓப்பன் ஏஐ நிறுவனத்தில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் பெரும் அளவில் முதலீடு செய்துள்ளது. சாம் ஆல்ட்மேன் நீக்கப்பட்டதை அடுத்து அவருக்கு மைக்ரோசாப்ஃட் நிறுவனம் பெரும் ஆதரவு வழங்கியது.
இதனிடையே, சாம் ஆல்ட்மேனை மீண்டும் நிறுவனத்தில் சேர்க்க வேண்டும் என்றும் இயக்குநர் குழு கலைக்கப்பட வேண்டும் என்றும் ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் ஊழியர்கள் கோரிக்கை வைத்தனர். கோரிக்கை ஏற்கப்படாதபட்சத்தில் நிறுவனத்தில் இருந்து ராஜினாமா செய்வதாக 700-க்கு மேற்பட்ட ஊழியர்கள் இயக்குநர் குழுவுக்கு கடிதம் எழுதினர். இந்நிலையில், சாம் ஆல்ட்மேனை மீண்டும் இணைத்துக் கொள்வதாக ஓப்பன் ஏஐ அறிவித்துள்ளது.