புதுடெல்லி: ஆன்லைன் கல்வி நிறுவனமான பைஜூஸ் அந்நியச் செலாவணி விதிமுறைகளை (பெமா) மீறியதாக கூறி அதன் தலைமைச் செயல் அதிகாரி ரவீந்திரனுக்கு அமலாக்கத் துறை நேற்று முன்தினம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பெங்களூருவில் தலைமை அலுவலகத்தை கொண்டு செயல்பட்டு வரும் திங்க் அண்ட் லேர்ன் பிரைவேட் லிமிடெட், பைஜூஸ் என்ற பெயரில் ஆன்லைன் கல்விச் சேவையை வழங்கி வருகிறது.
இந்த நிறுவனம், அந்நிய முதலீடுகள் விவகாரத்தில் அந்நியச் செலாவணி விதிமுறைகளை மீறி செயல்படுவதாக புகார்கள் தெரிவிக்கப்பட்டதையடுத்து ரவீந்திரனின் வீடு உட்பட அந்த நிறுவனத்துக்கு தொடர்புடைய இடங்களில் கடந்த ஏப்ரலில் சோதனை நடத்தப்பட்டது.
அதன் அடிப்படையில் கடந்த 2011 முதல் 2023 வரையிலான காலத்தில் ரூ.28,000 கோடிக்கும் அதிகமான அந்நிய முதலீடுகளை அந்த நிறுவனம் பெற்றிருப்பது தெரியவந்தது.
அதே காலகட்டத்தில் அந்நிய நேரடி முதலீடு என்ற பெயரில் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பைஜூஸ் நிறுவனம் ரூ.9,754 கோடியை அனுப்பியுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது. இத்துடன் ரூ.944 கோடியை விளம்பரம் மற்றும் சந்தைப்படுத்துதல் செலவுகளில் அந்த நிறுவனம் வரவு வைத்துள்ளது.
அந்நிய முதலீடுகள் தொடர்பாக போதுமான ஆவணங்களை சமர்ப்பிக்க தவறியதன் மூலம் அந்த நிறுவனம் ரூ.9,362 கோடிக்கு அந்நியச் செலாவணி மோசடியில் ஈடுபட்டுள்ளது கண்டறி யப்பட்டதையடுத்து பைஜூஸ் நிறுவனத்துக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.