திருவாரூர்: பருவ மழை காலங்களில் பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து நெல் ஜெய ராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம் விளக்கம் அளித்துள்ளது.
இது குறித்து, அந்த மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜிவ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சில இடங்களில், மழைநீரில் பயிர்கள் மூழ்கக் கூடிய நிலை உள்ளது. ஆகையால், பாரம்பரிய நெல் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், மகசூல் இழப்பை தடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
தேங்கியுள்ள மழை நீரை முழுவதும் வெளியேற்றாமல், மேல் மடையாக வெளியேற்ற வேண்டும். சமீபத்தில் நடவு செய்யப்பட்ட இளம் பயிர்கள் மழைநீரால் அடித்துச் செல்லப்பட்டிருந்தால், நாற்றங்காலில் மீதமுள்ள நாற்றுகளை பயன்படுத்தி நடவு செய்ய வேண்டும். தூர் வெடித்த பயிரை கலைத்து, வழித் தடங்களில் நடவு செய்து, பயிர் எண்ணிக்கையை பராமரிக்கலாம்.
முழுவதுமாக நடவு பயிர் அழுகியிருந்தால் குறுகிய கால நெல் ரகங்களை நடலாம் அல்லது நேரடி ஈர விதைப்பு செய்யலாம். பூஞ்சாண நோய்கள் வயலில் தென்பட்டால் நாட்டு மாட்டு சாண கரைசல் பயன்படுத்தி தீர்வு காணலாம். பூச்சித் தாக்குதல் தென்பட்டால் ஐந்திலை கரைசல் அல்லது மூலிகை பூச்சு விரட்டியை பயன்படுத்தி தீர்வு காணலாம்.
வேர் கரையான், வேர் அழுகல், வேர்புழு நோய்களை தடுக்க பீஜமாமிர்த கரைசலை பயன்படுத்தலாம். மழை காரணமாக நீர் தேங்கியிருக்கும் பட்சத்தில், நீர் வெளியேறும் வரை காத்திருக்காமல் பின்பட்ட குறுவை ரகங்களை உடனடியாக அறுவடை செய்து, கதிரடித்து தானியத்தை உலரச் செய்ய வேண்டும்.
பாரம்பரிய நெல் ரகங்களை மழைக் காலத்தில் பாதுகாப்பது குறித்த ஆலோசனைகளுக்கு 94433 220954 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.