வணிகம்

ஜாதிக்காய் சாகுபடியில் லாபம் ஈட்டும் விவசாயிகள் @ கோவை

எஸ்.கோபு

ஆனைமலை: தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் அதிக அளவில் தென்னை பயிரிடப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக தென்னையில் வெள்ளை ஈ தாக்குதல், கேரளா வாடல் நோய் உள்ளிட்ட பல்வேறு நோய் தாக்குதலால் தென்னை விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதற்கிடையில் தேங்காய், கொப்பரை விலை வீழ்ச்சி ஆகியவற்றால் தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதிலிருந்து மீண்டு வர விவசாயிகள் கடுமையாக போராடி வருகின்றனர். இந்நிலையில், தென்னையில் ஊடுபயிராக ஜாதிக்காயை விவசாயி கள் பயிரிட தொடங்கியுள்ளனர். இதனால் தென்னையில் இழந்த வருவாயை ஈடுசெய்ய முடியும் என நம்புகின்றனர்.

இதுகுறித்து ஆனைமலை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் கோபிநாத் கூறியதாவது: ‘மிர்ஸ்டிக்கா ப்ராகிரன்ஸ்’ என்ற தாவரவியல் பெயர் கொண்ட ஜாதிக்காய், நறுமணமூட்டும் மரவகை ஆகும். ஜாதிக்காயில் இருந்து கொட்டை மற்றும் ஜாதிபத்ரி என்ற இரு நறுமண பொருட்கள் பெறப்படுகின்றன. ஜாதிக்காயின் தாயகம் இந்தோனேசியா என்றாலும், இலங்கை, இந்தியா, சீனா மற்றும் மலேசியாவில் அதிகளவில் பயிரிடப் படுகின்றது. இந்தியாவில் கேரளா மாநிலத்தில் 90 சதவீதம் பயிரிடப்படுகிறது. தமிழகத்தில் இப்பயிரானது தென்னையில் ஊடுபயிராக நடவு செய்யப்படுகிறது. இந்தியாவில் ஆண்டுக்கு 4,540 டன் ஜாதிக்காய் கொட்டை தேவைப்படுகிறது. ஆனால் 2150 டன் மட்டுமே உற்பத்தி ஆகிறது.

அதேபோல ஜாதிபத்ரியும் ஆண்டுக்கு 760 டன் தேவைப்படுகிறது. 300 டன்கள் மட்டுமே உற்பத்தியாகிறது. தமிழகத்தில் தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறை வாயிலாக பரப்பு விரிவாக்க திட்டத்தில் ஜாதிக்காய் நாற்றுகள் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட உள்ளன. ஜாதிக்காயில் ஆண், பெண் என்ற பாலின வேறுபாடு உள்ளதால், பூக்கும் வரை அவற்றை பிரிக்க இயலாது. ஆண் மரங்களில் ஆண்டு முழுவதும் பூக்கள் இருக்கும். பெண் மரங்களில் 7 மாதங்கள் மட்டுமே பூக்கள் காணப்படும். ஆண், பெண் பாலின வேறுபாட்டை நிவர்த்தி செய்ய ஒட்டு செடிகளை பயன்படுத்தலாம். நடவு செய்து நல்ல முறையில் பராமரித்தால், 7 அல்லது 8-ம் ஆண்டில் இருந்து காய் பிடித்து, 50 ஆண்டு வரை மகசூல் தரும்.

ஆண்டில் மார்ச், ஏப்ரல் மற்றும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் அதிக காய்கள் கிடைக்கும். 1500 முதல் 1800 கிலோ காய்களில் 3 முதல் 10 கிலோ ஜாதிக்காய் கொட்டையும், 1400 கிராம் முதல் 1500 கிராம் ஜாதிபத்ரியும் கிடைக்கும். மேலும் ஜாதிக்காயில் இருந்து பழச்சாறு, ஊறுகாய், ஜெல்லி போன்று மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கலாம், என்றார். ஆனைமலையை சேர்ந்த ஜாதிக்காய் விவசாயி ஆனந்த் கூறும்போது, ‘‘கேரளா மாநிலத்தில் நிலவும் காலநிலை ஜாதிக்காய் சாகுபடிக்கு ஏற்றதாக உள்ளது. கேரளாவின் அருகில் உள்ள ஆனைமலை, பொள்ளாச்சி பகுதியிலும் அதே காலநிலை நிலவுவதால் இங்கு ஏராளமான தென்னை விவசாயிகள் தென்னையில் ஊடுபயிராக ஜாதிக்காய் பயிரிட்டுள்ளனர்.

மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் ஆனைமலை பகுதி இருப்பதால் கோடைமழை கிடைக்கிறது. இதனால் தரமான ஜாதிக்காய் இங்கு விளைகிறது. ஆயுர்வேத மருத்துவத்தில் ஜாதிக்காய் மற்றும் ஜாதிபத்ரி பயன்படுவதால் கேரளாவில் இருந்து அதிகமான வியாபாரிகள் தோட்டத்துக்கே வந்து வாங்கி செல்கின்றனர். தென்னையை விட 3 மடங்கு அதிக லாபம் கிடைக்கிறது” என்றார்.

SCROLL FOR NEXT