சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் 2 நாட்களில் ரூ.467.63 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது.
தமிழக அரசுக்கு வருவாய் ஈட்டி தருவதில் டாஸ்மாக் நிறுவனம் முக்கிய பங்கு வகிக்கிறது. தினசரி மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு மது விற்பனை நடைபெறும். மற்ற நாட்களை தவிர வார இறுதி நாட்களில் டாஸ்மாக் விற்பனை வெகுவாக அதிகரிக்கும் நிலையில், தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் மது விற்பனை உயரும்.
அந்தவகையில், தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் நேற்று முன்தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தீபாவளியையொட்டி, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் ரூ.467.63 கோடிக்கு மது விற்பனை நடைபெற்று உச்சத்தை தொட்டுள்ளது.
தீபாவளியன்று, டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதாலும், மதியம் 12 மணிக்கு கடை திறக்கும் வரை பொறுமை இல்லாத மதுப்பிரியர்கள் பலரும், தீபாவளிக்கு ஒரு நாள் முன்பே, மதுபாட்டில்கள் வாங்கி வைத்து கொண்டனர். இதனால், நவ.11-ம் தேதி மாலைக்கு பிறகு டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது.
இரவு 10 மணிக்கு கடையை மூடும் வரை மதுப்பிரியர்கள் தங்களுக்கு விருப்பமான மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர். இதேபோல், தீபாவளி தினத்தன்றும், டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு முன்பே, கடைகள் முன்பு கூட்டம் கூடியது. ஊழியர் கடையை திறந்ததும், மதுப்பிரியர்கள் முட்டி, மோதிக்கொண்டு மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர்.
அந்தவகையில், நவ.11 மற்றும் 12-ம் தேதி ஆகிய 2 நாட்களில் மட்டும் தமிழகத்தில் ரூ.467.63 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வழக்கமாக டாஸ்மாக் கடைகளில் தினமும் ரூ.150 கோடிக்கு மது விற்பனை நடைபெறும். ஆனால், தீபாவளியையொட்டி, 2 நாட்களும் வழக்கத்தைவிட கூடுதலாக 50 சதவீதம் அதிகமாக விற்பனை நடந்துள்ளது.
அதன்படி, நவம்பர் 11-ம் தேதி சென்னை மண்டலத்தில் ரூ.48.12 கோடியும், திருச்சி மண்டலத்தில் ரூ.40.02 கோடி, சேலம் ரூ.39.78 கோடி, மதுரை ரூ.52.73 கோடி, கோவையில் ரூ.40.20 கோடி என ரூ.220.85 கோடிக்கு விற்பனை நடந்துள்ளது. அதேபோல், நவ.12-ம் தேதி தீபாவளியன்று, சென்னை மண்டலத்தில் ரூ.52.98 கோடி, திருச்சி மண்டலத்தில் ரூ.55.60 கோடி, சேலம் ரூ.46.62 கோடி, மதுரை ரூ.51.97 கோடி, கோவை ரூ.39.61 கோடி என ரூ.246.78 கோடிக்கு விற்பனை நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அந்தவகையில், அதிகபட்சமாக மதுரை மண்டலத்திலும், குறைந்தபட்சமாக கோவை மண்டலத்திலும் மது விற்பனை நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும், இதுதொடர்பாக டாஸ்மாக் நிர்வாகம் எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.