மதுரை: தீபாவளியை முன்னிட்டு மதுரை மத்திய சிறை சந்தையில் கைதிகள் தயாரித்த ஆயத்த ஆடை, இனிப்பு, கார வகைகளின் விற்பனையை சிறைத் துறை டிஐஜி பழனி தொடங்கி வைத்தார்.
மதுரை மத்திய சிறையில் திண்பண்டங்கள், ஆடை வகை உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கைதிகளால் தயாரிக்கப் படுகின்றன. தீபாவளியையொட்டி சிறை வாசிகளின் தயாரிப்புகளை பொது மக்களுக்கு விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆயத்த ஆடை, இனிப்பு, கார வகைகளின் விற்பனையை சிறைத் துறை டிஐஜி பழனி தொடங்கி வைத்தார்.
சிறை கண்காணிப்பாளர் பரசுராமன், உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். தொழிலதிபர் செல்வராஜ், தனது ஊழியர்களுக்கு வழங்குவதற்காக 100 கிலோ சிறப்பு இனிப்பு பெட்டகத்துக்கான ஆர்டரை தந்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். ரோட்டரி பிரசிடென்ட் சிவசங்கர் தனது நிறுவன ஊழியர்களுக்கென ஆர்டர் கொடுத்துள்ளார்.
இது குறித்து டிஐஜி பழனி கூறியதாவது: கைதிகள் கல்வி, தொழிலில் சிறந்து விளங்க தமிழ்நாடு சிறைத் துறை டிஜிபி அமரேஷ் பூஜாரி ஆலோசனையின் பேரில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். தீபாவளி பண்டிகையையொட்டி மதுரை மத்திய சிறையில் கைதிகள் தயாரித்த பொருட்களை விற்பனை செய்ய ஏற்பாடு செய்துள்ளோம்.
புத்தாடைகள், இனிப்பு, கார வகைகள் தரமாக தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இனிப்பு வகைகள் கிலோ ரூ.300, கார வகைகள் கிலோ ரூ.240-க்கு விற்கப்படுகிறது. சிறையில் தயாரித்த செக்கு நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், சிறையில் நெய்த போர்வைகள், துண்டுகள், கைலிகள், பிரசித்தி பெற்ற மதுரை சுங்கிடி சேலைகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
வணிக நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களுக்கும், நண்பர் களுக்கும் வழங்க வசதியாக 9 வகையான காரம், இனிப்பு வகை அடங்கிய பெட்டகத்தை ரூ.499-க்குவழங்குகிறோம். இப்பொருட்களை வாங்கி மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும். மக்களுடன் கைதிகள் இணைய இது ஒரு வாய்ப்பு என நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.