ஓசூர்: ஓசூர் சந்தையில் உரிய விலை கிடைக்காததால், விவசாயிகள் அறுவடையை கைவிட்டதால், தோட்டங்களில் சாமந்திப் பூக்கள் வாடி வருகிறது. பருவ கால சாகுபடி பரப்பு மற்றும் சந்தை விலை முன்னறிவிப்பு செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஓசூர், தேன்கனிக்கோட்டை, பாகலூர், பேரிகை உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் விவசாயிகள் சாமந்தி, செண்டு மல்லி, ரோஜா உள்ளிட்ட மலர்களை சாகுபடி செய்துள்ளனர். இப்பகுதியில் அறுவடை செய்யப்படும் மலர்களை விவசாயிகள் ஓசூர் மலர் சந்தைக்கு விற்பனைக்குக் கொண்டு வருகின்றனர்.
இங்கிருந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கர்நாடக மாநிலத்துக்கும் பூக்கள் விற்பனைக்குச் செல்கின்றன. சீசனுக்கு ஏற்ப இப்பகுதியில் மலர் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டாலும், சந்தை தேவை, மகசூல் நிலவரத்தை அடிப்படையாகக் கொண்டு பூக்களுக்கு விலை நிர்ணயம் செய்யப்படுவதால், ஆண்டு முழுவதும் நிலையான விலை பூக்களுக்கு இருப்பதில்லை.
ஆயுத பூஜை விற்பனையை அடிப்படையாக கொண்டு சாமந்திப் பூ சாகுபடி செய்யப்பட்ட நிலையில், சீதேஷ்ண நிலை மாற்றம் காரணமாக மகசூல் அதிகரித்துள்ளது. ஆயுத பூஜையையொட்டி, சந்தையில் சாமந்திப்பூவுக்கு வரவேற்பு இருந்தது. இதனால், ஒரு கிலோ ரூ.160 முதல் ரூ.240 வரை விலை கிடைத்தது. தற்போது, சந்தையில் வரவேற்பு குறைந்த நிலையில், மகசூல் அதிகரிப்பால் வரத்து அதிகரித்து விலை குறைந்துள்ளது.
இதனால், சாமந்திப்பூ ஒரு கிலோ ரூ.10-க்கு விற்பனையாகிறது. இதனால், விவசாயிகளுக்கு அறுவடை மற்றும் போக்குவரத்துச் செலவுக்குக் கூட வருவாய் கிடைக்காததால், பாகலூர், பேரிகை, காமன்தொட்டி உள்ளிட்ட பகுதி விவசாயிகள் பூக்கள் அறுவடை பணியை கைவிட்டுள்ளனர். இதனால், தோட்டங்களில் அறுவடைக்குத் தயாராக உள்ள பூக்கள் பூத்துக் குலுங்கி, வாடி உதிர்ந்து வருகின்றன.
வேளாண் வணிகத் துறை மற்றும் தோட்டக்கலைத் துறை மூலம் ஆண்டுதோறும் பருவ காலங்களில் மலர் சாகுபடி பரப்பு இலக்கு மற்றும் விலை முன் அறிவிப்புகளை முன் கூட்டியே தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.