மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் முதல் முறை யாக 35000 புள்ளியைத் தொட்டது. மத்திய அரசு கூடுதலாக வாங்க இருந்த ரூ.50,000 கோடி கடன் அளவு குறைக்கப்பட்டது. ரூ.20,000 கோடி போதும் என பொருளாதார விவகாரங்களுக் கான செயலாளர் சுபாஷ் சந்திர கார்க் அறிவித்தார். இதனால் நிதிப்பற்றாக்குறை கட்டுக்குள் இருக்கும் என்னும் கணிப்பு காரணமாக இந்திய பங்குச் சந்தைகள் உயர்வில் முடிந்தன.
இதற்கு முந்தைய உச்சமான 34963 என்னும் புள்ளியை சென்செக்ஸ் நேற்று கடந்தது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 35118 புள்ளி வரை சென்றது. வர்த்தகத்தின் முடிவில் 310 புள்ளிகள் உயர்ந்து 35081 புள்ளியில் சென்செக்ஸ் முடிந்தது. இதே போல நிப்டியும் 88 புள்ளிகள் உயர்ந்து 10788 புள்ளியில் முடிவடைந்தது. வர்த்தகத்தின் முடிவில் 10803 புள்ளியை தொட்டது. நிப்டி பட்டியலில் உள்ள 50 பங்குகளில் 38 பங்குகள் உயர்ந்தும் 12 பங்குகள் சரிந்து முடிவடைந்தன. நிப்டி பேங்க் குறியீடு இதுவரை இல்லாத உச்சமான 26324 புள்ளியைத் தொட்டது. இதில் பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் சிண்டிகேட் வங்கி ஆகிய பொதுத்துறை வங்கிகள் 6 சதவீத அளவுக்கு உயர்ந்தன.
பிஎஸ்இ-யில் உள்ள அனைத்து துறை குறியீடுகளும் உயர்ந்து முடிந்தன. இதில் கேபிடல் குட்ஸ் குறியீடு அதிகபட்சமாக 1.59 சதவீதம் உயர்ந்தது. அதனைத் தொடர்ந்து வங்கிக் குறியீடு 1.55 சதவீதமும், பிஎஸ்யூ குறியீடு 1.41 சதவீதமும், ஐடி குறியீடு 1.28 சதவீதமும் உயர்ந்து முடிந்தன. சென்செக்ஸ் பங்குகளில் ஆக் ஸிஸ் (4.65%), ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (3.44%), ஐசிஐசிஐ வங்கி (2.68%), இன்ஃபோசிஸ் (2.61%) மற்றும் யெஸ் வங்கி (2.58%) உயர்ந்து முடிந்தது. மாறாக விப்ரோ, ஹெச்டிஎப்சி வங்கி, ஹீரோமோட்டோ கார்ப், ஒஎன்ஜிசி மற்றும் ஹெச்யூஎல் ஆகிய பங்குகள் அதிகம் சரிந்தன.
செவ்வாய் கிழமை வர்த்தகத்தில் இந்திய நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.246 கோடி அளவுக்கு பங்குகளை விற்றிருக்கின்றனர். மாறாக அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் ரூ. 693 கோடி அளவுக்கு இந்திய சந்தையில் முதலீடு செய்திருக்கிறார்கள். டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு உயர்ந்திருப்பதும் சந்தையின் ஏற்றத்துக்கு காரணமாகும். நேற்று ஒரு டாலர் ரூ.63.75 வரை அதிகபட்சம் சென்றது.
2017-ம் ஆண்டு ஐடி பங்குகளுக்கு ஏற்ற ஆண்டாக இருக்கவில்லை. ஆனால் இந்த ஆண்டு தொடக்கம் முதல் இந்த பங்குகள் உயர தொடங்கி இருக்கின்றன. தொடர்ந்து எட்டாவது நாளாக இன்ஃபோசிஸ் பங்கு உயர்ந்து வருகிறது. டிசிஎஸ் பங்குகள் நேற்று 2.6 சதவீதம் வரை உயர்ந்தது. வர்த்தகத்தின் இடையே டிசிஎஸ், இன்ஃபோசிஸ், ஹெச்சிஎல் டெக் மற்றும் டெக் மஹிந்திரா ஆகிய பங்குகள் 52 வார உச்சபட்ச விலையைத் தொட்டது. நேற்று நிப்டி ஐடி குறியீடு 1.8 சதவீதம் வரை உயர்ந்தது. இந்த ஆண்டில் ஐடி பங்குகளில் மாற்றம் இருக்கும் என மார்கன ஸ்டான்லி நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.