வணிகம்

சில்லறை விற்பனையில் அதிகரித்து வரும் வெங்காய விலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை

செய்திப்பிரிவு

புதுடெல்லி: சில்லறை விற்பனையில் வெங்காய விலை உயர்ந்துள்ள நிலையில், அதனைக் கட்டுப்படுத்த கையிருப்பில் உள்ள வெங்காயத்தை சில்லறை மற்றும் மொத்த விற்பனை சந்தைக்கு அரசாங்கம் விடுவித்து வருகிறது. அதுவும் குறிப்பாக எந்தெந்த மாநிலங்களில் விலையேற்றம் அதிகமாக உள்ளதோ அங்கெல்லாம் முடைக்கால கையிருப்பில் இருந்து விடுவிக்கப்படுவதாக மத்திய நுகர்வோர் விவகாரத் துறை தெரிவித்துள்ளது.

இன்றைய (அக்டோபர் 27) நிலவரப்படி தேசிய அளவில் வெங்காய விலை சராசரியாக 57 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது, கிலோவுக்கு ரூ.47 என்றளவில் விலை உயர்ந்துள்ளது. முடைக்கால கையிருப்பை விடுவித்ததன் மூலம் வெங்காய விலையை கிலோவுக்கு ரூ.25 என்றளவில் சில்லறை விற்பனைச் சந்தையில் கிடைக்கச் செய்து நுகர்வோர் சுமையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இதே அக்டோபர் மாதத்தில் வெங்காய விலை கிலோ ரூ.30-க்கு விற்பனையானது என்று நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இன்று (அக்.27) டெல்லியில் ஒரு கிலோ வெங்காயம் கிலோ ரூ.30-க்கும் பிற பகுதிகளில் கிலோவுக்கு ரூ.37 என்றளவிலும் விற்கப்படுகிறது. சில இடங்களில் உச்சபட்சமாக ரூ.47க்கு விற்பனையாகிறது.

வெங்காய விலையேற்றத் தடுப்பு நடவடிக்கை குறித்து நுகர்வோர் விவகாரத் துறை செயலர் ரோகித் குமார் சிங் கூறூகையில், "ஆகஸ்ட் பாதியில் இருந்தே நாங்கள் முடை கையிருப்பில் இருந்து வெங்காயத்தை பகுதியாக விடுவித்து வந்தோம். இப்போது கூடுதலாக விடுவிக்கப்படும். நுகர்வோர் நலன் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது" என்றார்.

நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சகத்தின் தகவலின்படி ஆகஸ்ட் பாதியில் இருந்து 22 மாநிலங்களின் வெவ்வேறு பகுதிகளுக்கும் 1.7 லட்சம் டன் வெங்காயம் விடுவிக்கப்பட்டுள்ளது. என்சிசிஎஃப், நேஃபட் என்ற இரண்டு கூட்டுறவு அமைப்புகளின் வாயிலாக சில்லறை சந்தைக்கு கொண்டு சேர்க்கப்படுகிறது. டெல்லியில் மானிய விலையில் வாகனங்கள் மூலம் வெங்காயம் நுகர்வோருக்குக் கொண்டு சேர்க்கப்படுகிறது.

ஏன் விலையேற்றம்? - அக்டோபரில் காரிப் பயிர் வெங்காயம் சந்தைக்கு வந்திருக்க வேண்டும். ஆனால், அது தாமதப்படுகிறது. ஜூன் - ஜூலை மாதங்களில் பருவமழை தொடங்கும்போது காரிப் பருவம் தொடங்குகிறது. இதனை பருவமழை விதைப்பு காலம் என்றும் அழைக்கின்றனர். ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை ஒருசில பகுதிகளில் இயல்பைவிட மிகமிகக் குறைவாகவும், சில இடங்களில் இயல்புக்கு மாறாகவும் பெய்துள்ளது. இதனால் காரிப் பருவ விதைத்தலும் தள்ளிப்போனதால் அந்தப் பருவத்தில் பயிராகி சந்தைக்கு வந்திருக்க வேண்டிய வெங்காயம் இன்னும் சந்தைக்கு வரவில்லை. அதேபோல், ஏற்கெனவே கையிருப்பில் உள்ள ராபி பருவத்தில் அறுவடை செய்யப்பட்ட வெங்காயமும் கரைந்து வரும் சூழலில் விலையேறுவதாக வெங்காய வியாபாரிகள் மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்,.

SCROLL FOR NEXT