இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி | கோப்புப் படம் 
வணிகம்

வாரத்துக்கு 70 மணி நேரம் வேலை பார்க்க வேண்டுமா? - பெரு நிறுவனங்களின் சிஇஓக்கள் கூறுவது என்ன?

செய்திப்பிரிவு

புதுடெல்லி: வாரத்துக்கு 70 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும் என இந்திய இளைஞர்களை இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி வலியுறுத்தியுள்ள நிலையில், உலகின் மிகப் பெரிய நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளும் அதே கருத்தை வலியுறுத்தியுள்ளனர்.

இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி வெளியிட்ட ஆடியோ ஒன்றில், "உற்பத்தித் திறன் குறைந்த நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. உலக அரங்கில் போட்டிபோட வேண்டுமானால் அதற்கேற்ப இந்திய இளைஞர்கள் தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும். வாரத்துக்கு 70 மணி நேரம் உழைக்க வேண்டும். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, ஜப்பான், ஜெர்மனி ஆகியவற்றில் பணி நேரம் அதிகரிக்கப்பட்டது" எனக் கூறி இருந்தார். அதிக நேரம் பணியாற்ற வேண்டும் எனக் கூறும் முதல் சிஇஓ இவர் அல்ல.

இவருக்கு முன், இது குறித்துப் பேசிய ஓலா நிறுவனத்தின் சிஇஓ பவிஷ் அகர்வால், "பல தலைமுறைகளாக மற்ற நாடுகள் கட்டியெழுப்பியதை ஒரு தலைமுறைக்குள் உருவாக்குவதற்கானது நமது தருணம்" என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன் 2020ல் பேசிய இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி, "கோவிட் பெருந்தொற்றுக் காலத்திற்கு முந்தைய நிலைக்கு நாம் செல்ல வேண்டுமானால், இந்திய தொழில் வல்லுநர்கள் ஒவ்வொருவரும் வாரத்துக்கு 60 மணி நேரம் பணியாற்ற வேண்டும்" என வலியுறுத்தி இருந்தார்.

சீனாவின் அலிபாபா நிறுவனத்தின் நிறுவனரா ஜாக் மா, சீன தொழில்நுட்பத் துறை வேகமாக முன்னேற 996 கோட்பாடுகளை அறிவித்தார். அதில், அதிக நேரம் பணியாற்றும் பணியாளர்களுக்கு அவர்களின் கடின உழைப்பைப் போற்றும் விதத்தில் வெகுமதி வழங்கப்படும் என அறிவித்தார். மேலும், காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை பணியாற்ற வேண்டும் என்பதை அவர் பரிந்துரைத்தார். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது குடும்ப வாழ்க்கையை பாதிக்கும் என்றும், ஒருவரும் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலை உருவாகும் என்றும் விமர்சிக்கப்பட்டது.

உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க், வாரத்திற்கு 100 மணி நேரத்திற்கு மேலாக உழைக்குமாறு பணியாளர்களை கடந்த ஆண்டு அக்டோபரில் கேட்டுக்கொண்டார். தான் அவ்வாறுதான் உழைப்பதாகவும், சில நேரங்களில் அலுவலகத்திலேயே தான் உறங்கிவிடுவதாகவும், பணியாளர்களும் இதை பின்பற்ற வேண்டும் என்றும் எலான் மஸ்க் கேட்டுக்கொண்டார்.

பாம்பே ஷேவிங் கம்பெனி நிறுவனத்தின் சிஇஓ-வான ஷாந்தனு தேஷ்பாண்டே, "பணியில் முதல்முறையாக இணைபவர்கள் அடுத்த 4-5 ஆண்டுகளுக்கு கடுமையாக உழைக்க வேண்டும். நாள் ஒன்றுக்கு 18 மணி நேரம் உழைக்க வேண்டும். நன்றாக சாப்பிடுங்கள், உடலை நன்றாக வைத்துக்கொள்ளுங்கள். நாள் ஒன்றுக்கு 18 மணி நேரம் உழையுங்கள்" என அவர் பரிந்துரைத்தார்.

SCROLL FOR NEXT