நாகர்கோவில்: ஆயுத பூஜையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை சந்தையில் நேற்று 300 டன் பூக்கள் விற்பனையாகின.
தோவாளை மலர் சந்தையில் இருந்து தமிழகம் மட்டுமின்றி, கேரளா மற்றும் வெளிநாடுகளுக்கும் பூக்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.
ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு தோவாளை மலர் சந்தையில் நேற்று அதிக அளவில் பூக்கள் கொள்முதல் செய்யப்பட்டிருந்தன. கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமின்றி, திருநெல்வேலி, திண்டுக்கல், மதுரை, சத்தியமங்கலம், உதகை, ஓசூர், பெங்களூரு போன்ற பகுதிகளில் இருந்தும் பூக்கள் கொண்டுவரப்பட்டன. அதிகாலையிலேயே தோவாளை மலர் சந்தை களைகட்டியது.
மல்லிகை கிலோ ரூ.1,000: ரூ.750-க்கு விற்ற ஒரு கிலோ பிச்சிப்பூ நேற்று ரூ.900-க்கு விற்பனையானது. மல்லிகை கிலோ ரூ.1,000-க்கு விற்கப்பட்டது. அதேபோல, அரளி ரூ.500, ரோஜா ரூ.300, கனகாம்பரம் ரூ.500, கிரேந்தி ரூ.100, மஞ்சள் கிரேந்தி ரூ.120, மரிக்கொழுந்து ரூ.150-க்கு விற்பனையானது.
சரஸ்வதி பூஜைக்கு முக்கியத்துவம் வாய்ந்த தாமரைப்பூ ரூ.20 முதல் ரூ.25 வரை விற்பனையானது. நேற்று ஒரே நாளில் தோவாளை மலர் சந்தையில் 300 டன் பூக்கள் விற்பனையானதால், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.